Tuesday, 13 October 2015

சூரிய ஒளி மின்சாரத்தை 90 சதவீதம் பயன்படுத்த வாய்ப்பு: கட்டணம் பெருமளவு குறையும் என்பதால் பொதுமக்கள் ஆர்வம்- 3 ஆயிரம் பேர் மானியம் பெற்றனர்













வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தில் 90 சதவீதத்தை அவர்களே பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் தமிழகத்தில் சூரிய மின் அமைப்புகளை நிறுவு வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது 12 ஆயிரம் காற்றாலைகள் மூலம் 7 ஆயிரத்து 500 மெகாவாட்டும், சூரிய ஒளி மூலம் 120 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வசதி உள்ளது. தமிழக அரசு கடந்த 2012-ல் சூரிய ஒளி மின் உற்பத்தியை அதிகரிக்க ‘சூரிய மின்சக்தி கொள்கை’யை வெளியிட்டது.
இதன்படி சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் போடப் பட்டு வருகின்றன. தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மட்டுமின்றி வீடுகள் மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களிலும் சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்புகள் நிறுவப் படுவதை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.
வீடுகளைப் பொறுத்தவரை, சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவும்போது மத்திய, மாநில அரசுகளின் மானியமும் கிடைக்கிறது. இதுகுறித்து எரிசக்தித்துறை அதிகாரி ஒருவர் ’தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்புப்படி, வீடுகளில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தில் 90 சதவீதத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற் காக அந்த வீடுகளுக்கு மின்வாரி யம் சார்பில் ரிவர்ஸ் மீட்டர் வழங்கப் படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆர் வத்துடன் சூரிய ஒளி மின் அமைப்பை நிறுவி வருகின்றனர்.இந்த வகையில் இதுவரை 7ஆயிரம் பேருக்கு மீட்டர் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 3 ஆயிரம் பேர் மானியம் பெற்றுள்ளனர்.
விதிமுறைகள்
உயரமான கட்டிடங்களில் சூரிய ஒளி மின் அமைப்பை நிறுவுவது கட்டாயம் என சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இது தொடர்பாக வீட்டுவசதித்துறை அதிகாரிகள் சமீபத்தில் எரிசக்தித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். விரைவில் வீட்டு வசதித் துறை சார்பில் இதற்கான விதிமுறை கள் வகுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
90 சதவீதம் பயன்படுத்துவது எப்படி?
ஒரு வீட்டுக்கு ஒரு நாள் தேவை 10 யூனிட் மின்சாரம் எனில், அதில் 9 யூனிட்டை சூரிய ஒளி மூலம் பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள ஒரு யூனிட்டை மின்வாரிய தொடரமைப்பில் இருந்து பயன்படுத்த வேண்டும்.
பகலில் ஆட்கள் இல்லாத வீடுகளில் பகல் வேளையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, மின்வாரியத்துக்கு அளித்துவிட்டு, இரவு நேரத்தில் அந்த அளவு மின்சாரத்தை தொடரமைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மீட்டர் வழங்கப்படுகிறது. இதன் மூலம், மின்வாரியத்துக்கு உற்பத்தி தொடர்பான பாரம் குறையும். பொதுமக்களுக்கும் கட்டணம் குறையும் என எரிசக்தித்துறை அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment