Sunday, 25 October 2015

தேங்காய் மூடி வைக்கப்பட்டதால் பரபரப்பு ரெயில்கள் தாமதமாக சென்றன


நீடாமங்கலத்தில் தண்டவாளத்தின் இணைப்பு பகுதியில் (பாயிண்ட்) தேங்காய் மூடி வைக்கப்பட்டதால் ரெயில்கள் தாமதமாக சென்றன.

கண்காணிப்பு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் கடந்த காலங்களில் தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் வைப்பது, தேவையற்ற பொருட்களை வைத்து சிக்னல் கிடைக்காமல் செய்வது போன்ற தேவையற்ற செயல்கள் ரெயில்வே துறையினரையும் ரெயில் பயணிகளையும் அச்சுறுத்தும் வகையில் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், மாநில போலீசார், க்யூ பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தனர். மேலும் விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து அத்தகைய செயல்கள் நிறுத்தப்பட்டன. இருப்பினும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தேங்காய் மூடி

இந்த நிலையில் நேற்று காலை 8.50 மணிக்கு மன்னார்குடியிலிருந்து, மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரெயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது. அப்போது காரைக்காலிலிருந்து, திருச்சி செல்லும் பாசஞ்சர் ரெயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் கிராசிங் ஆக வேண்டி இருந்தது. இந்த ரெயிலும் நீடாமங்கலம் ரெயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சிக்னல் கிடைக்காததால் நீடாமங்கலம் அருகே ரெயில் நின்றது.

ரெயில் வராமல் நின்றதால் சந்தேகமடைந்த ரெயில்வே நிலைய மேலாளர் மற்றும் ஊழியர்கள் ரெயில் நின்ற பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது நீடாமங்கலம்-திருவாரூர் ரெயில் பாதையில் சிக்னல் பாயிண்டில் தேங்காய் மூடி வைக்கப்பட்டிருந்ததால் சிக்னல் விழவில்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தேங்காய் மூடியை ரெயில்வே ஊழியர்கள் பாயிண்டில் இருந்து சிரமப்பட்டு எடுத்தனர்.

பின்னர் சிக்னல் கிடைத்ததும் காரைக்கால் பாசஞ்சர் ரெயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வழக்கமான நேரத்தை விட 25 நிமிடம் தாமதமாக வந்தது. பின்னர் காரைக்கால், மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் நீடாமங்கலம் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் நெடுஞ்சாலை போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது. 

No comments:

Post a Comment