அமெரிக்காவில் இருப்பது போல (911), இந்தியாவிலும் அனைத்து அவசர உதவிக்கும் ஒரே எண்ணை (112) அழைக்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) இந்த திட்டத்துக்கு தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) ஒப்புதல் வழங்கி உள்ளது.
நாடு முழுவதும் இப்போது பல்வேறு அவசர உதவிகளுக்காக 100 (போலீஸ்), 101 (தீ), 102 (ஆம்புலன்ஸ்) மற்றும் 108 (பேரிடர்) ஆகிய எண்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 108 ஆம்புலன்ஸ் அவசர உதவிக்கும் பயன்படுகிறது.
ஆனால் அமெரிக்காவில் அனைத்து அவசர உதவிக்கும் 911 என்ற எண் பயன்பாட்டில் உள்ளது. இதுபோல பொதுமக்கள் எளிதாக நினைவில் வைத்துக்கொள்வதற்கு வசதியாக இந்தியாவிலும் ஒரே எண்ணை அறிமுகம் செய்ய டிராய் திட்டமிட்டுள்ளது. இதற் காக 112 என்ற எண் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு டிஓடி அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து இந்த புதிய எண் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
அதேநேரம், பழைய எண்களும் இரண்டாவது வாய்ப்பாக சிறிது காலம் பயன்பாட்டில் இருக்கும். அதாவது இப்போது பயன்பாட்டில் உள்ள எந்த எண்ணை அழைத்தாலும் 112-க்கு திருப்பிவிடப்படும். பின்னர் படிப்படியாக இந்த எண்கள் வழக்கத்திலிருந்து நீக்கப்படும் என டிஓடி தெரிவித்துள்ளது.
மேலும் அழைப்பவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்காக அனைத்து செல்போன்களிலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை புகுத்தலாம் என்று டிராய் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது. ஆனால், பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் குறைந்த விலை செல்போன்கள், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளாது என்பதால் இந்த பரிந்துரையை டிஓடி நிராகரித்துவிட்டது.
No comments:
Post a Comment