Saturday, 3 October 2015

12.5% உணவுப் பொருள்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலப்பு: மத்திய அரசின் பரிசோதனையில் கண்டுபிடிப்பு


நாடு முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களின் மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில், 12.5 சதவீத உணவுப் பொருள்களில் அனுமதிக்கப்படாத பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பது மத்திய அரசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உணவுப் பொருள்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை கண்டறியும் வகையில், மத்திய அரசால் "மானிடரிங் ஆஃப் பெஸ்டிசைட் ரிசிடியூஸ்' என்ற திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 2014-15ஆம் ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள், இயற்கை அங்காடிகள், விவசாய உற்பத்தி சந்தைக் குழுவின் சந்தைகளில் இருந்து உணவுப் பொருள்களின் 20,618 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில், காய்கறிகள், பழங்கள், நறுமணப் பொருள்கள், மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை, அரிசி, கோதுமை, பருப்புகள், மீன், இறைச்சி, முட்டை, தேயிலை, பால், தண்ணீர் ஆகியவை அடங்கும்.
 அவை அனைத்தும், ஆராய்ச்சிக் கூடங்களில் தீவிர பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில், 12.5 சதவீத உணவுப் பொருள்களில், அனுமதிக்கப்படாத பூச்சிக் கொல்லி மருந்துகளான கார்போசல்பான், ஆசிபேட், பிஃபென்திரின், ஆசிடமிபிரிட், டிரியாஜோபோஸ், மெடாலாசைல், மலாதியன், புரோபினோபோஸ், ஹெக்சாகோனாஜோல் உள்ளிட்டவை கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வேளாண் அங்காடி, சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 1,180 காய்கறி மாதிரிகள், 225 பழ மாதிரிகள், 732 நறுமணப் பொருள்களின் மாதிரிகள், 30 அரிசி மாதிரிகள், 43 பருப்பு மாதிரிகளில் அவை கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
 காய்கறி மாதிரிகளில் ஆசிபேட், பிஃபென்திரின், டிரியாஜோபோஸ், ஆசிடமிபிரிட், மெடாலக்சைல், மலாதியான் ஆகிய அனுமதிக்கப்படாத பூச்சிக் கொல்லி மருந்துகளும், பழங்களின் மாதிரிகளில் ஆசிபேட், ஆசிடமிபிரிட், கார்போ சல்பான், சைபர்மிதிரின், புரோபினோபோஸ், குயினால்போஸ், மெடாலாசைல் ஆகியவையும் கலந்துள்ளன.
 அரிசி மாதிரிகளில், புரோபினோபோஸ், மெடாலாசைல், ஹெக்சாகோனாஜோலும், பருப்பு மாதிரிகளில் டிரியாஜோபோஸ், மெடாலாசைல், கார்பரைல், ஆசிபேட் ஆகியவை கலந்துள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment