ஆடை கட்டுப்பாட்டு விதிகளை நீக்கவேண்டும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு அரசாணையில் அறிவித்ததுபோன்று கட்டண விலக்கு அளிக்கவேண்டும், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் அசைவ உணவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட செயலாளர் நிருபன் முன்னிலை வகித்தார். 10 மாணவிகள் உள்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதையடுத்து மாணவர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் அண்ணா பல்கலைக்கழக பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாணவர்கள் தரப்பு கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக பிரதிநிதிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment