தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் உதவியாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்ளிட்ட 1,863 ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான (குரூப் 2ஏ) எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை (403), மருத்துவம், கிராம சுகாதாரப் பணிகள் (213), பதிவுத் துறை (59), வணிக வரித் துறை (191), சுகாதாரத் துறை (136), பள்ளிக் கல்வி இயக்ககம் (76), தலைமைச் செயலக நிதித் துறை (26), தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (62), மீன்வளத் துறை (45), போக்குவரத்துத் துறை (35) உள்ளிட்ட துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள், கூட்டுறவுத் துறையில் உள்ள இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் (308) பணியிடங்கள் என மொத்தம் 1,863 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணியிடங்களுக்கு இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 11 ஆகும். விண்ணப்பக் கட்டணம் (நிரந்தர பதிவுக் கட்டணம்) ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.75.
இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 116 மையங்களில் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பாடத்திட்டம், தேர்வுத் திட்டம் ஆகியவை தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 18004251002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
வயது வரம்பு: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆகும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 30 ஆகும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி. (ஏ), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), கைவிடப்பட்ட விதவைகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
அனைத்துப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்தந்தப் பணியிடங்களுக்கு உரிய பட்டப் படிப்புகள் குறித்த விவரங்கள் அறிவிப்பாணையில் வழங்கப்பட்டுள்ளன.