சுத்தம் சுகம் தரும். வாகனங்களை இயக்க, தொழில், வணிகம், வேலை செய்ய உதவும் இன்றியமையாத உறுப்பு கைகள். அக் கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வழிகாட்டிய வள்ளல் நபி (ஸல்) அவர்கள் கடை பிடித்ததைக் கவனமாக பின்பற்றுவோம்.
"நம்பிக்கையுடையோரே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும் முழுங்கைகள் வரையில் உங்கள் கைகளையும் கணுக்கால் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள்'' என்று ஏவுகிறது எழில் மறையின் 5-6 ஆவது வசனம்.
நகங்கள் அழுக்கு சேரும் உறுப்புகள். தொழுகைக்கு முன்னும் உளு செய்யும் பொழுதும் நகங்களின் உள்ளே நீரை செலுத்தி கழுவுவது கட்டாயம். நகங்களை வளர விடாமல் வெட்ட வேண்டும். ஆடு, மாடு, ஒட்டகப்பாலை கறப்பவர்கள் கட்டாயமாக நகங்களை வெட்டிக் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நகம் வெட்டும் பொழுது முதலில் வலது கையில் ஆட்காட்டி விரலில் துவங்கி வரிசையாக நடுவிரல் அதற்கடுத்த விரல் பிறகு சுண்டுவிரல் அதன்பின் இடது கையில் சுண்டு விரல் அதற்கடுத்த விரல் நடுவிரல், ஆள்காட்டி விரல், பெருவிரல் கடைசியாக வலது கை பெருவிரல் வரை முறையாக நகம்
வெட்டுவார்கள். கால் விரல் நகங்களை முதலில் வலது கால் சுண்டு விரலிலிருந்து துவங்கி பெருவிரல் வரை முடித்து பின் இடது கால் சுண்டு விரலில் ஆரம்பித்து பெருவிரல் வரை முடிப்பார்கள். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நகம் வெட்டுவார்கள். நகம் வெட்டியபின் கை கால்களைச் சுத்தமாக கழுவுவார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து இயற்கை உபாதைகளைக் கழித்த பின் இரு கைகளையும் கழுவி சுத்தம் செய்து மீண்டும் தூங்குவார்கள். அறிவிப்பவர் - இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- முஸ்லிம்.
"உறக்கத்திலிருந்து விழித்தெழுபவர் கைகளை மூன்று முறை கழுவாமல் கையை நீருள்ள பாத்திரத்தில் இட வேண்டாம். இரவில் தூக்கத்தில் அவரின் கைகள் இருந்த இடத்தைத் தூங்குபவர் அறியமாட்டார். ""தூய நபி (ஸல்) அவர்களின் தூய்மைக்குரிய நேயமான நல்லுரையை நவில்பவர் அபூஹீரைரா (ரலி) நூல்- முஸ்லிம்.
"என் சிற்றன்னை மைமூன் (ரலி) குளிப்பதற்காக நீரை நிரப்பி வைத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முதலில் இரு கைகளையும் கழுவிய பின் பாத்திரத்தில் உள்ள நீரை எடுத்து குளித்தார்கள்'' அறிவிப்பவர் - இப்னு அப்பாஸ் (ரலி) நூல் - முஸ்லிம்.
ஒரு சிறிய வாளியில் உள்ள நீரைக் கைகளால் அள்ளும்பொழுது கைகளை நீரெடுக்கும் பாத்திரமாக நிய்யத் (உறுதி மொழி) செய்து கொண்டால் கையிலிருந்து பாத்திரத்தில்
விழும் நீர் பயன்படுத்தப்பட்ட நீராகாது. கிணற்று ஓரத்தில் நின்று நீரிறைத்து குளிப்பவரும் கைகளைப் பாத்திரமாக நிய்யத் செய்ய வேண்டும்.
"வலது கரத்தால் அசுத்தங்களை கழுவக் கூடாது. வலது கரத்தால் மர்ம உறுப்புகளைத் தொடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்'' என்ற தாஹா நபி (ஸல்) அவர்களின் வாகான வாக்கை அறிவிப்பவர் அபூகதாதா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.
இறந்த உடலைத் தொட்ட பின்னும் குளிப்பாட்டிய பின்னும் குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும்பொழுது கைகளைச் சுத்தமாக கழுவுவது கட்டாயம். நகங்களை வெட்டிய பின் குளிப்பது நல்லது. குளிக்க முடியாதவர்கள் கைகளைக் கழுவி சுத்தப்படுத்துவது அவசியமானது. கைகள் நீரில் நனைய வேண்டும்.
"இரு கால்களையும் கணுக்கால் உட்பட கழுவ வேண்டும். பின்னங்கால்களையும் விட்டு விடாமல் கவனித்து கழுவ வேண்டும். கை, கால், முகத்தைக் கவனமாக கழுவி தூய்மைப் படுத்தியவர்கள் மறுமையில் கழுவிய உடல் உறுப்புகள் வெண்மையாக ஒளிர வருவார்கள்'' என்ற திருநபி (ஸல்) அவர்களின் திருவருள் மொழியைத் திருப்பி சொல்பவர் ஹீதைபா (ரலி) நூல் -முஸ்லிம்.
நற்குர்ஆனின் பொற்புடைய போதனைகளைப் பின்பற்றி நந்நபி (ஸல்)அவர்கள் நடந்து காட்டிய வழியில் நாமும் கை, கால், முகம் முதலிய உறுப்புகளை உரிய முறையில் கழுவி சுத்தப்படுத்தி நித்தமும் சுத்தம் பேணி சுற்று சூழல் காத்து சுகமாய் வாழ்வோம். இகபரம் இரண்டிலும் இறைவனின் நிறைவான அருளைப் பெறுவோம்.
No comments:
Post a Comment