Friday 12 June 2015

செல்வமகள் சேமிப்புத் திட்டம்: 9.36 லட்சம் கணக்குகள் தொடக்கம்


தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தின் கீழ், இதுவரை 9.36 லட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
 பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலும், மத்திய அரசால் செல்வமகள் சேமிப்புக் கணக்கு (சுகன்யா சம்ரித்தி) என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
 ஜனவரி 30-ஆம் தேதி நாடு முழுவதும் இந்தத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் அஞ்சல் துறை வாயிலாக "செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம்' என்ற பெயரில் இந்தத் திட்டம் பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது.
 இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டம் தொடங்க வருபவர்களின் வசதிக்காக, மார்ச் 22, 29 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அஞ்சலகங்கள் இயங்கும் என்று அஞ்சல் துறையால் அறிவிக்கும் அளவுக்கு, நாளுக்கு நாள் அஞ்சலகம் வருவோர் எண்ணிக்கை அதிகரித்தது.
 4 மாதத்தில் 9.36 லட்சம் கணக்குகள்: இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் கூறியதாவது:
 தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு நான்கு மாதமாகிறது. நிகழாண்டு மே 31-ஆம் தேதி வரை, 9 லட்சத்து 36 ஆயிரத்து 133 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னை நகர மண்டலத்துக்கு உள்பட்ட அஞ்சலகங்களில் மட்டும் 3 லட்சத்து 44,926 சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
 ரூ. 179.92 கோடி முதலீடு: இந்த சேமிப்புக் கணக்குகள் வாயிலாக, தமிழக அஞ்சல் வட்டத்தில் ஏறத்தாழ ரூ. 179.92 கோடி அளவுக்கு முதலீட்டுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அஞ்சல் துறையால் 1 கோடி அளவுக்கு சேமிப்புக் கணக்குகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் அளித்துவரும் அபரிமிதமான ஆதரவால், நிர்ணயித்த இலக்கைக் காட்டிலும் கூடுதலான கணக்குகள் தொடங்கும் வாய்ப்பு உள்ளது.
 செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடங்குவது தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், அதுகுறித்து முழு விவரங்களுடன் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கலாம் என்றார்.

 சேமிப்புக் கணக்குகள் விவரம்
தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்புக் கணக்குகள் விவரம்:
* சென்னை நகர மண்டலம் - 3,44,926 கணக்குகள்
÷பெறப்பட்ட முதலீட்டுத் தொகை- ரூ. 68.14 கோடி
* தமிழக அஞ்சல் வட்டம் - 9,36,133 கணக்குகள்
÷பெறப்பட்ட முதலீட்டுத் தொகை ரூ. 179.92 கோடி

No comments:

Post a Comment