Tuesday, 16 June 2015

ரூ.320 கோடி மேகி நூடுல்ஸ்களை அழிக்க ஏற்பாடு: நெஸ்லே நிறுவனம் தகவல்


இந்திய உணவுப் பாதுகாப்பு தரநிர்ணய ஆணையம் தடை செய்து, சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறு உத்தரவிட்ட மேகி நூடுல்ஸ்களை, நெஸ்லே நிறுவனம் அழிக்க உள்ளது. அதன் சந்தை மதிப்பு ரூ.320 கோடி என்று அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளது.
 காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூடாமேட் ஆகிய வேதிப் பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட மேகி நூடுல்ஸில் அதிகமாக இருந்த காரணத்தால், இந்திய உணவுப் பாதுகாப்பு தரநிர்ணய ஆணையம் கடந்த 5ஆம் தேதி மேகி நூடுல்ûஸத் தடை செய்தது. 
 அதனை சந்தையிலிருந்து திரும்பப் பெறுமாறு நெஸ்லே நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
 இதனையடுத்து, மேகி நூடுல்ஸ்களை சந்தையிலிருந்தும், விநியோகஸ்தர்களிடமிருந்தும், தொழிற்சாலைகளில் இருந்தும் திரும்பப் பெறும் நடவடிக்கையில் இருப்பதாகவும், திரும்பப் பெறும் நூடுல்ஸ் பொட்டலங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாவும் நெஸ்லே நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளது. 
 சந்தையில் தற்போது இருக்கும் மேகி நூடுல்ஸ்களின் விற்பனை விலை சுமார் ரூ.210 கோடியாகும். மேகி நூடுல்ஸ்களைத் திரும்பப் பெறுமாறு உத்தரவு வந்த நேரத்தில் தொழிற்சாலைகளிலும், விநியோகஸ்தர்களிடமும் இருந்த கையிருப்பின் மதிப்பு ரூ.110 கோடியாகும்.
 தற்போது தெரிவித்துள்ள மதிப்பு தோராயமானதுதான் என்றும் திரும்பப் பெறும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மொத்த நூடுல்ஸ் பொட்டலங்களின் சரியான மதிப்பைக் கூற இயலாது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 மேலும் மேகி நூடுல்ஸ் பொட்டலங்களை, சந்தையிலிருந்து திரும்பப் பெற்று, அவற்றை அழிக்க உள்ள இடத்திற்கு எடுத்துச் செல்லும் செலவு, அழிக்க ஆகும் செலவு போன்றவை கூடுதலாக ஏற்படும். எனவே அழிக்கப்படும் நூடுல்ஸ்களின் சரியான இறுதி மதிப்பை, அழிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் மட்டுமே கூற இயலும் என்றும் நெஸ்லே நிறுவனம், மும்பை பங்குச் சந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment