ரமலான்- நோன்புக்காலம்
மனிதன் தன்னைப் படைத்த இறைவனின் பக்கம் திரும்பும்போது அவன் வாழும் 60 ஆண்டுக்குள் 5000 ஆண்டுகள் வாழ்ந்த பேற்றை, இறைவனைப் பணிந்து வாழும் தவப்பேற்றை அடைய முடியும் என இஸ்லாம் கூறுகிறது.
“இறைத்தூதர் அவர்களே! உங்களைப் பின்பற்றி வாழும் எங்கள் வாழ்க்கையோ மிகக் குறுகிய காலம். ஆனால் முன்னர் வாழ்ந்த இறைத்தூதர்களின் காலமோ 900 வருடங்களுக்கு மேல்.
ஆகவே இந்த குறுகிய காலத்தில் நிறைந்த நன்மைகள் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு உண்டா?” என முஹம்மது நபி அவர்களிடம் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபியவர்கள் இந்த ரமலான் மாதத்தை சுட்டிக்காட்டி விளக்கம் தந்தார்.
உடலையும் மனதையும் புடம்போடும் நோன்பு
ரமலான் என்ற அரபுச் சொல்லின் பொருள் “சுட்டெரித்தல்”. பொன்னைப் புடம் போடுவதன் மூலம் அதிலுள்ள கசடுகள் தனியாகப் பிரிந்து சொக்கத் தங்கம் கிடைக்கிறது. அதுபோல் ரமலான் நோன்பு நன்மையை தீமையிலிருந்து பிரித்தெடுக்கிறது.
இம்மாதத்தில் காலை சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி, மாலை சூரியன் மேற்கில் சாயும்போது நிறைவடைகிறது. இந்த நோன்பால், உடலுக்குச் சக்தியைத் தரும் சர்க்கரை அளவு குறைவடைந்து மனித உடல் உறுப்புக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான சக்தி மட்டுமே எஞ்சி இருக்கிறது.
கண், காது, மூக்கு, வாய், மெய் என ஐம்புலன்களும் அவற்றிற்கான முக்கிய பணியை மட்டும் செய்ய வேண்டிய கட்டாய நிலையில் உடல் இயங்குகிறது. ஆகவே, கண் பார்க்க வேண்டியதை மட்டும் பார்க்கிறது; காது கேட்க வேண்டியதை மட்டும் கேட்கிறது; மூக்கு எதை முகர வேண்டியதை மட்டும் முகருகிறது; வாய் பேச, சுவைக்க வேண்டியதை மட்டும் செய்கிறது; மெய்யாகிய இந்த உடல் உணர வேண்டிய சுகத்தை மட்டும் உணருகிறது. அதற்கு மேல் அது எதையும் செய்யாத கட்டு திட்டத்திற்கு வருகிறது.
நோன்பு நம்மை எச்சரிக்கிறது
குளிர்ப்பதனப் பெட்டியைத் திறந்தால் அங்கே வண்ண வண்ண நிறங்களில் குளிர்பானங்கள் குலுங்கி வரவேற்கின்றன. ஆனால் நோன்பு, ‘நீ நோன்பாளி உன்னை இறைவன் பார்க்கிறான்’ என எச்சரிக்கிறது. ஆம்! உடல் பசித்திருக்கும்போது மனிதனின் ஐம்புலங்களுக்கும் ஒரு நிறைவு.
இப்போது அவனது ஆறாம் அறிவான பகுத்தறிவு விழித்துக்கொள்ள, அவன் தன்னைப் பற்றி சிந்திக்க, அதன் மூலம் தன்னைப் படைத்த இறைவனைப் பற்றி தியானிக்க ஆரம்பிக்கின்றான். இறைநெருக்கமும் அதனால் அச்சமும் பெறுகின்றான். இதனைப் பின்வரும் குர்ஆன் வசனங்கள் விளக்குகின்றன.
‘இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது; அதன் மூலம் நீங்கள் இறையச்சம் உள்ளவர் ஆகலாம்’ என்கிறது குர்ஆன் (2:183).
மனிதனை அவனது அதிகப்படியான இச்சைகளிலிருந்தும் அதனால் ஏற்படும் அனைத்துத் தீமைகளிலிருந்தும் அதன் காரணமாக அவன் போய்ச்சேர வேண்டிய நரகத் தீயிலிருந்தும் பாதுகாக்கிறது. அதனால் ‘நோன்பு ஒரு கேடயம்' என்கிறது ஒரு நபிமொழி.
பொழுது சாய்கிறது. தொழுகைக்கான அழைப்போசை கேட்கிறது. ஒரு நோன்பாளி ஒரு மிடறுத் தண்ணீர், ஒரு பேரீச்சை பழத்துண்டைக் கொண்டு நோன்பு திறக்கிறார். உடல் முழுவதும் ஒரு உஷ்ணம் பரவுகிறது.
உற்சாகம் ஊடுருவுகிறது. காய்ந்துபோன செடியின் வேரில் நீர் விழுந்ததும் அதன் இலைகளும் கிளைகளும் பசுமையாகி நிமிர்ந்து நின்று நமக்கு நன்றி சொல்வதைப் போல ஒரு நோன்பாளிக்குள் ‘ஒரு மிடறு தண்ணீர், ஒரு பேரீச்சைப் பழத்துண்டுக்கு இத்தனை மகிமையா? இறைவனின் எத்தனை அருட்கொடைகளை நாம் அனுபவித்திருக்கிறோம்’ என்ற நன்றியுணர்வு அவனுள் மேலோங்குகிறது. பிறர் பசியும் இந்த நோன்புகாலத்தில் தான் உணரப்படுகிறது. ஆம் கஞ்சனும் வள்ளலாகும் சமயம்தான் இந்த ரமலான் நோன்புக்காலம்.
ஆகவே இத்தனை சிறப்புக்களைக் கொண்ட இந்த ரமலானை வரவேற்போம். வாழும் 60 ஆண்டுகளில் 5000 ஆண்டுகள் வாழ்ந்த தவ வாழ்வைப் பெறுவோம்.
No comments:
Post a Comment