Wednesday 3 June 2015

அரசு காப்பீடு: மக்கள் தேவையை பூர்த்தி செய்யுமா?


120 கோடிக்கும் மேலாக மக்கள் தொகை உள்ள இந்தியாவில் காப்பீடு எடுத்தவர்களின் எண்ணிக்கை இன்னும் இரட்டை இலக்க சதவீதத்தை கூட தொடவில்லை. காப்பீட்டை எளிய மக்களுக்கு கொண்டு செல்வதற்காக மே மாதம் ஆரம்பத்தில் மூன்று புதிய திட்டங்களை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு, ஓய்வூதியம் ஆகிய மூன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த திட்டங்களின் சாதகம் மற்றும் பாதகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தேர்வு செய்வது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
அடல் பென்சன் யோஜனா (ஓய்வூதிய திட்டம்)
இந்தியாவில் பெரும்பாலானவர்கள் தனியார் துறையில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. தனியார் துறையில் பணிபுரிபவர்களை விட முறைசாரா துறையில் பணி புரிபவர்கள் அதிகம். இவர்களுக்காக கொண்டுவரப்பட்டதுதான் இந்தத் திட்டம்.
இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதுள்ள நபர்கள் இதில் இணையலாம். இவர்கள் செய்யும் முதலீடு மற்றும் தொகைக்கு ஏற்ப, 60 வயதுக்கு பிறகு மாதம் தோறும் ரூ.1,000/ 2,000/3,000/4,000/5,000 கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைபவர்கள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும்.
உதாரணத்துக்கு 18 வயது நபர் இணைகிறார் என்றால் குறைந்தபட்சம் மாதம் 42 ரூபாய் முதல் அதிகபட்சம் 210 ரூபாய் வரை செலுத்த வேண்டி இருக்கும். ஒரு வேளை 40 வயது நபர் இணைகிறார் என்றால் குறைந்தபட்சம் ரூ.291 முதல் ரூ.1,454 வரை முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.
60 வயதுக்கு பிறகு இந்த திட்டத்தின் மூலம் பென்சன் கிடைக்கும். ஒரு வேளை பாலிசிதாரர் இடையில் இறந்துவிட்டால் அவரின் கணவன்/மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
சாதகம்
இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கு 2020-ம் நிதி ஆண்டு வரை அரசாங்கம் குறிப்பிட்ட தொகையை செலுத்தும். ஆண்டுக்கு செலுத்தும் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.1,000. இதில் எந்த தொகை குறைவோ அந்த தொகையை அரசு செலுத்தும்.
பாதகம்
இந்தத் திட்டத்தில் இணைந்துவிட்டால் 60 வயதுக்கு முன்பாக வெளியேற முடியாது. மற்ற ஓய்வூதியத் திட்டங்களில், எந்த திட்டத்தில் (பங்குச்சந்தை அல்லது கடன் சார்ந்த முதலீடு) முதலீடு செய்ய வேண்டும் என்ற வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் இந்த திட்டத்தில் முதலீடு முறையை பாலிசிதாரர் தேர்வு செய்ய முடியாது.
இப்போது 30 வயதில் உள்ள ஒருவர் பென்சன் திட்டத்தில் இணைகிறார் என்றால் 60 வயதுக்கு பிறகுதான் பென்சன் கிடைக்கும். இன்னும் 30 வருடங்களுக்கு பிறகு அதிகபட்சம் 5,000 ரூபாய் பென்சனாக கிடைத்தால் கூட அந்த தொகை போதுமா, பணவீக்கத்துக்கு ஏற்ப அந்த தொகை இருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விகுறி.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (டேர்ம் இன்ஷூரன்ஸ்)
இது ஒரு எளிமையான டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி. 18 வயது முதல் 50 வயது உள்ளவர்கள் இந்த பாலிசியை எடுக்கலாம். ஒரு வருடத்துக்கான பிரீமியத் தொகை 330 ரூபாய்.
ஒருவேளை பாலிசிதாரர் மரணம் அடையும் போது அவரின் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் கிடைக்கும். இந்த பாலிசி எடுப்பதற்கு மருத்துவ சோதனை தேவையில்லை. பெரிய அளவிலான ஆவணங்கள் தேவையில்லை.
சாதகம்
மருத்துவ சோதனை இல்லாமல் இரண்டு லட்ச ரூபாய்க்கு 330 ரூபாய் பிரீமியத்தில் பாலிசி எடுக்க முடிவது சாதகமே. காப்பீடே இல்லாமல் இருப்பவர்களுக்கு எளிமையாக கிடைப்பது சாதகம்தான். ஆனால்..
பாதகம்
பொதுவாக டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி தொகை என்பது ஒருவரின் ஆண்டு வருமானத்தை போல குறைந்தபட்சம் 10 மடங்கு இருக்க வேண்டும் என்பதுதான் நிதி ஆலோசகர்களின் கருத்து. அப்போதுதான், சம்பந்தப்பட்டவரின் குடும்பம் தற்போதைய நிதி நிலைமையில் தொடர முடியும்.
2 லட்ச ரூபாய் பாலிசி தொகை என்றால் வருடம் 20,000 ரூபாய் சம்பாதிப்பவர்களுக்குதான் இந்த பாலிசி ஏற்றது என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. 2 லட்ச ரூபாய் காப்பீடு போதுமா என்பது பெரிய கேள்விகுறி.
அடுத்து 330 ரூபாய் என்ற பிரீமியத்தொகை என்பது மூன்று வருடங்களுக்குதான். அதன் பிறகு க்ளைம் விகிதத்தை பொருத்து பிரீமியம் உயரலாம்.
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (விபத்து காப்பீடு)
விபத்து மூலமாக ஏற்படும் உயிர் இழப்பு, உடல் ஊனத்துக்கு வழங்கப்படும் பாலிசி. 12 ரூபாயில் இந்த பாலிசி எடுக்க முடியும். விபத்து மூலமாக ஏற்படும் மரணம் அல்லது உடல் ஊனத் துக்கு க்ளைம் செய்துகொள்ள முடியும்.
18 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இந்த பாலிசியை எடுக்க முடியும். பாலிசிதாரரின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக இந்த தொகை பிடித்தம் செய்யப்படும்.
விபத்தில் மரணம் அடையும் போது இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும். மரணம் அடையாமல் இரு கண்கள் (அ) இரு கால்கள் அ) இரு கைகள். இதில் எதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டால் 2 லட்ச ரூபாய் பெற முடியும். ஒரு கண், ஒரு கால், ஒரு கை இழந்திருந்தால் ஒரு லட்ச ரூபாயை இழப்பீடாக பெற முடியும்.
சாதகம்
12 ரூபாய்க்குள் விபத்து காப்பீடு எடுக்க முடிவது.
பாதகம்
2 லட்ச ரூபாய் என்பது மிக குறைவான தொகை.
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா என்கிற விபத்து காப்பீடு திட்டம், விபத்து மூலமாக ஏற்படும் உயிர் இழப்பு, உடல் ஊனத்துக்கு வழங்கப்படும் பாலிசி. 12 ரூபாயில் இந்த பாலிசி எடுக்க முடியும். விபத்து மூலமாக ஏற்படும் மரணம் அல்லது உடல் ஊனத்துக்கு க்ளைம் செய்து கொள்ள முடியும்

No comments:

Post a Comment