Thursday 11 June 2015

தத்கல் பயணச்சீட்டுக்கான முன்பதிவு நேரம் மாற்றம்


கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், தத்கல் பயணச் சீட்டுகளுக்கான முன்பதிவு நேரத்தை ரயில்வே நிர்வாகம் மாற்றியுள்ளது. 
 அதன்படி, ஏசி வகுப்பு ரயில் பெட்டிகளுக்கான தத்கல் பயணச்சீட்டுகள் காலை 10 முதல் 11 மணிவரையும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு பகல் 11 மணியில் இருந்தும் முன்பதிவு செய்யலாம். 
 இதேபோல், ரயில்களுக்கான தத்கல் முறையில் முன்பதிவு செய்யும் பயணச்சீட்டுகளை ரத்து செய்யும்போது 50 சதவீத கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி அளிப்பது குறித்தும் ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 தத்கல் பயணச்சீட்டு முன்பதிவுக்கான நேர மாற்றத்தை ரயில்வே வாரிய உறுப்பினர் அஜய் சுக்லா, தில்லியில் அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
 இந்திய ரயில்வே உணவு, சுற்றுலாக் கழகத்தின் இணையதளத்தை பல்வேறு சேவைகளுக்காக அண்மையில் ஒரே நாளில் 3 கோடி பேர் அணுகினர். இதனால் அந்த இணையச் சேவை மிகவும் தாமதமானது.
 எனவே, இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும்போது வேகமாக சேவை கிடைப்பதை உறுதிசெய்யவும், கவுன்ட்டர்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் இந்தப் புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை சில தினங்களில் அமலுக்கு வரும்.
 மேலும், தத்கல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து விட்டு பின்னர் ரத்து செய்யும் பயணிகளுக்கு பயணக்கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை திருப்பித் தருவது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.
 பயணச்சீட்டை ரத்து செய்வதற்கு குறிப்பிட்ட கால அளவு நிர்ணயிக்கப்படும். அதற்குள் ரத்து செய்யும் பயணிகளுக்கு குறிப்பிட்ட சதவீதத் தொகை திருப்பித் தரப்படும்.
 பிரீமியம் ரயில்களுக்கும் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தில் ஒரு பகுதி திருப்பித் தரப்படும். 
 அந்த வகை ரயில் பயணச்சீட்டுகளில் திருப்பி அளிக்கப்படும் தொகை 50 சதவீதம் வரை இருக்கலாம். பிரீமியம் ரயில்களை சுவிதா ரயில்கள் என்று பெயர் மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
 தற்போது, இதுபோன்ற பயணச்சீட்டுகளை ரத்து செய்யும்போது கட்டணம் திருப்பித் தரப்படுவதில்லை. 
 இதனால், பயணிகளில் குறிப்பிட்ட பிரிவினர் சம்பந்தப்பட்ட ரயில்களை விரும்புவதில்லை.

No comments:

Post a Comment