Tuesday, 9 June 2015

ஜூலை 1 முதல் தலைக்கவசம் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


தமிழகம் முழுவதும் வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 அவ்வாறு தலைக்கவசம் அணியத் தவறினால் ஓட்டுநர் உரிமம் உள்பட இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 என்.குமார் என்பவர் கடந்த 2011, மே மாதம் 2-ஆம் தேதி, சென்னை- விருகம்பாக்கம் போக்குவரத்து மண்டல அதிகாரி அலுவலகம் எதிரே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வேன் மோதி விபத்து ஏற்பட்டது.
 அதில், தலை உள்பட உடலின் பல்வேறு பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமார் அதே மாதம் 4-ஆம் தேதி இறந்தார். 
 இதையடுத்து, ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு கோரி குமாரின் மனைவி மல்லிகா தனது குழந்தைகளுடன் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தார்.
 வழக்கை விசாரணை செய்த தீர்ப்பாயம் இழப்பீடாக ரூ. 12 லட்சத்து 23 ஆயிரத்து 100-ஐ வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் தீர்ப்பாயம் வழங்கிய இழப்பீடு போதுமானதாக இல்லை என்று கூறி, அதை உயர்த்தி வழங்குமாறு மல்லிகாவும், குழந்தைகளும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
 இந்த வழக்கு விசாரணை, நீதிபதி என்.கிருபாகரன் முன் நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 
 தர்மம் தலை காக்கும் என்று தமிழில் கூறுவார்கள். தர்மம் தலை காக்குமா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், தலைக்கவசம் உயிரையும், தலையையும் காக்கும்.
 மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 129-இன் படி கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியாததால் விலை மதிக்க முடியாத உயிரை இழக்க நேரிடுகிறது. 
 இதுதொடர்பாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும், அதிகாரிகள் அதைப் பின்பற்றுவதில்லை. பொதுவாக சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிவதில்லை.
 தலைக்கவசம் அணியாத காரணத்தால் கடந்த ஆண்டில் விபத்தில் சிக்கி 6,419 பேர் தமிழகத்தில் மட்டும் இறந்துள்ளனர். அதாவது நாளொன்றுக்கு 17 பேர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர்.
 இந்த வழக்கு விசாரணையின் போது, "இறந்தவர் விபத்து நடந்தபோது தலைக்கவசம் அணியவில்லை. அணிந்திருந்தால் அவர் உயிரிழப்பதைத் தடுத்திருக்கலாம்' என்று காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது. இருந்தாலும் அந்த வாதத்தை பதில் மனுவில் அவர்கள் கொண்டுவரவில்லை. அதனால், அந்த வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
 எனவே, தீர்ப்பாயம் வழங்கிய ரூ. 12 லட்சத்து 23 ஆயிரத்து 100 இழப்பீட்டை ரூ. 20 லட்சமாக உயர்த்தி வழங்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம், 7.5 சதவீத வட்டியுடன் மேல் முறையீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும்.
 தலைக்கவசம் அணியாததால், கடந்த 2005-ஆம் ஆண்டு 1,670-ஆக இருந்த இறப்பு 2014-ஆம் ஆண்டில் 6,419-ஆக உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது ஓட்டுபவரின் உயிருக்கே ஆபத்தானது. 
 எனவே, தலைக்கவசம் அணிவது தொடர்பாக இந்த நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. இந்த உத்தரவுகளை, வாகன ஓட்டிகளை தேவையில்லாமல் தொந்தரவு செய்வதற்கு போலீஸ் அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. 
 அவ்வாறு போலீஸார் மீது ஏதாவது லஞ்சப் புகார் வந்தால், அதை கடுமையாகக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 எனவே, ஜூலை 1-ஆம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை ஜூன் 18-ஆம் தேதிக்கு முன்னர் பொது மக்களுக்கு தமிழக உள்துறைச் செயலர், மாநில காவல் துறைத் தலைவர் இருவரும் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்தத் தவறினால், உள்துறைச் செயலரும், டிஜிபியும் ஜூன் 19-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.
 இது தவிர, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, பதிவு செய்யப்பட்ட வழக்குகள், இதர தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். 
 அனைத்து மாநிலங்களிலும் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி, அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
 மேலும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து துண்டுப் பிரசுரங்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ. முத்திரை அவசியம்!
 இரு சக்கர வாகன ஓட்டிகள் அணியும் ஹெல்மெட் ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்டதாக இருக்க வேண்டும். இதுகுறித்து உயர் நீதிமன்ற உத்தரவில் கூறியிருப்பதாவது:
 இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியத் தவறினால், ஓட்டுநர் உரிமம் உள்பட வாகனத்தின் அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்யப்படும் எனவும், ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய தலைக்கவசம் வாங்கிய ரசீதைக் காட்டிய பிறகே வாகனத்தின் ஆவணங்களும், உரிமமும் திருப்பித் தரப்படும் எனவும், பொது மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும்.
 மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்திருக்கிறார்களா, இல்லையா என்பதைக் கண்காணிப்பதற்காக, முக்கிய சந்திப்புகள், சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். 
 அவ்வாறு தலைக்கவசம் அணியவில்லை எனில், நோட்டீஸ் அளித்து விசாரணை நடத்தி, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment