மக்காவுக்கு வெளியே இருந்தது ‘நூர்’ மலை. அதில் ஒரு குகை. ‘ஹிரா’ என்பது அதன் பெயர். அதை நோக்கி நபிகள் சென்று கொண்டிருந்தார். கையில் சிறிது உணவு மற்றும் குடிநீர். பார்வையோ பாதையில் பதிந்திருக்க நினைவுகளோ மக்காவாசிகளைச் சுற்றி வட்டமிட்டவாறு இருந்தன. அந்த நினைப்பால் இதயம் கனத்து வலித்தது. தொலைவில் ‘கஅபா’ இறையில்லம் தெரிந்தது.
மனம் முள்ளில் சிக்கிக்கொண்ட மலராய் வலிக்க.. மனக்குரலோ உதடுகளை அசைத்து, “இறைவா! நேர்வழி காட்டுவாயாக!” என்று தவத்தில் லயித்திருந்தது. அது ரமலான் மாதத்தின் பின்னிரவு நேரம். இன்னும் சில மணித்துளிகளில் பொழுது புலர்ந்துவிடும்.
இந்நிலையில், சட்டென்று குகை இருட்டின் திரையைக் கிழித்துக் கொண்டு ஒளிக்கற்றைகளின் பிரகாசப் பேரொளி கண்களைக் கூசச் செய்தது. அந்தக் குகையின் ஏகாந்த அமைதியைக் கலைத்தவாறு ஒளிமலர்கள் கோடிகோடியாய்ப் பூத்தன. வானவர் தலைவர், ஜிப்ரீல் அங்கு தோன்றி அவரது திருவாயிலிருந்து “ஓதுவீராக!” என்ற திருக்குர்ஆனின் முதல் வசனம் இறைவனின் அருளாய் இறங்கிய நன்னாள் அது.
இதுவரை ஏற்படாத குகை அனுபவத்தில் பாதிக்கப்பட்ட நபிகள், பதறியவராய் வீட்டுக்குச் சென்றவர் தம் அன்பு மனைவியிடம், “போர்த்துங்கள்..! போர்த்துங்கள்!” என்கிறார்.
அதன்பின் சில நாள் வெறுமையில் கழிய, ஒரு நாள் மீண்டும் அதே போன்றதொரு சம்பவம். “போர்த்தி மூடி உறங்குபவரே! எழும்! எச்சரிக்கை செய்யும்; உம் இறைவனின் மேன்மையை!” என்று சமூகத்திற்கு அறவழி போதிக்கப் பணித்தது.
இப்படி நபிகளார் மூலமாய் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமே ரமலான்.
அம்மாதத்தைக் குறித்து திருக்குர்ஆன், “ரமலான் மாதம் எத்தகையது என்றால், அம்மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், மேலும், நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே, இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும்.”
நோன்பு ஏன் நோற்கப்படுகிறது?
நோன்பின் மூலமாக இறையச்சமுடையோராய் மாறிவிடக் கூடும் என்று இதற்கு திருக்குர்ஆன் விளக்கமளிக்கிறது.
முட்புதர்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் வழிப்போக்கன் தன்னுடலை ஒடுக்கிக்கொண்டு நடப்பதைப் போல, உலகில் ஒழுக்க வரம்புகளைப் பேணி எச்சரிக்கையுடன் வாழ்வதற்கான ஒரு மாதப் பயிற்சிக் காலம் அது.
ஆற்றல் குறைந்துபோன மின்கலத்தை மீண்டும் சக்தி ஏற்றம் செய்வதைப் போல இறையடியானுக்கு இறையச்சம் என்னும் ஆற்றலைப் பெருக்கிக்கொள்ளும் பயிற்சிக்கான களமே ரமலான்.
கடைசியில் நோன்பைக் கடைப்பிடித்து இறைக்கட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியின் அடையாளமாகக் கொண்டாடப்படும் விழாவே ரமலான் எனப்படும் ஈகைத்திருநாள்; ஷவ்வால் மாத முதல் பிறையைக் காணும் நன்னாள்.
அதிகாலையில் விழிப்பது, குறிப்பிட்ட நேரத்திற்குள் உண்டு முடிப்பது, அதிலிருந்து அந்தி சாயும்வரை 12-14 மணி நேரம் உண்ணாமல் பருகாமல், இல்லற இன்பங்களில் ஈடுபடாமல், தீமைகளிலிருந்து விலகி இறை நினைவு களிலேயே லயித்திருப்பது, இரவில் விழித்திருந்து ‘தராவீஹ்’ எனப்படும்.
சிறப்புத் தொழுகையில் திருக்குர்ஆனை முழுவதுமாய் அந்த மாதத்தில் ஓதித் தொழுவது, ரமலானின் கடைசி பத்து நாட்களில் ஓரிரவாக மறைந்திருக்கும், திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட ஆயிரம் மாதங்களைவிடச் சிறப்பான அந்த ஒற்றைப்படை இரவைத் தேடி அதிகமான இறைவணக்கங்களில் ஈடுபடுவது, தனக்கும், தனது குடும்பத்தார்க்கும், தன்னைச் சுற்றி வாழும் சமூக மக்களுக்கும், வசிக்கும் தாய் நாட்டுக்கும் நலன் வேண்டிப் பிரார்த்திப்பது, தவறுகளுக்கு மனம் வருந்து அழுது பாவமன்னிப்பு கேட்பது, தான தர்மங்களில் அதிகம் அதிகமாகச் செலவழிப்பது, நலிந்தவர் துயர் களைவது என்று தொடர்ச்சியான சுழல்வட்டப் பயிற்சிப் பாசறையே ரமலான்.