Saturday 13 June 2015

எம்எல்எம் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்
கோப்புப் படம்
சங்கிலித் தொடர் (எம்எல்எம்) வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.ஆர்.ஒதிசாமி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘கவர்ச்சிகரமான லாபம் பெறலாம் என விளம்பரம் செய்து மல்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்எல்எம்) என்ற சங்கிலித் தொடர் வர்த்தகம் செய்யப்படுகிறது. பலர் பணத்துக்கு ஆசைப்பட்டு இதில் சேர்ந்து பாதிக்கப்படுகின்றனர். எனவே, எம்எல்எம் வர்த்தகத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.
இந்த மனுவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அவர்கள் தமது உத்தரவில் கூறியதாவது:
பிரமிடு போன்ற இந்த திட்டத்தில் புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஏராளமான பணம் புரள்கிறது. இத்திட்டத்தை நேரடியாக கண்காணிக்க எந்தவொரு சட்டரீதியான அதிகார அமைப்பும் இல்லை. இந்த வர்த்தகத்தை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் வரைவு மசோதா கொண்டுவந்துள்ளன.
தடுப்பு நடவடிக்கையும் தேவை
மனுதாரர் குறிப்பிட்டுள்ள வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ.800 கோடிக்கு மோசடி செய்துள்ளது. இந்நிறுவனத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிறுவன சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இதுபோன்ற வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இத்தகைய திட்டங்களால் பொதுமக்கள் ஈர்க்கப்பட்டு, பாதிக்கப்படுவதை தடுக்க உரிய விளம்பரங்களை வெளியிடுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment