Sunday, 9 November 2014

திருப்பூருக்கு தேவை ஒரு லட்சம் தொழிலாளர்கள்

இளைஞர்களே, உங்களுக்கான வாய்ப்பு காத்திருக்கு!

 
   நம் நாட்டில் மற்ற மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் இன்னமும் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் திருப்பூர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. படித்த பட்டதாரிகள் முதல், படிக்காத பாமரர் வரை, அனைத்து தரப்பினருக்கும் வேலை வாய்ப்பை வைத்துக் கொண்டு, தொழிலாளர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்கு, பின்னலாடை உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியே, முக்கிய காரணம்.


கடந்த 1929ல் மிக சிறிய அளவில் துவங்கிய பின்னலாடை உற்பத்தி தொழில், படிப்படியாக, 1978ல் ஏற்றுமதி வர்த்தகத்துக்குள் கால்பதித்தது. ஆடை உற்பத்தியுடன், 'நிட்டிங்', 'டையிங்', 'பிளீச்சிங்', 'காம்பாக்டிங்', 'ரைசிங்', 'பிரின்டிங்', 'எம்ப்ராய்டரி' என, பல வகையான தொழில்கள், பின்னலாடை துறையின் அங்கமாக உருவெடுத்தன.


இந்நிறுவனங்களில், ஆடை உற்பத்தி பிரிவில், 'பேட்டன் மாஸ்டர்', 'கட்டிங் மாஸ்டர்', 'டெய்லரிங்', 'செக்கிங்', 'அயர்னிங்', 'பேக்கிங்' போன்ற பணியிடங்கள்; இதர 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களில், 'மெஷின் ஆப்ரேட்டர்', 'ஹெல்பர்' போன்ற பணியிடங்கள் உள்ளன. இவை தவிர, நிர்வாக அளவில் மேலாளர், எழுத்தர், மனிதவள மேம்பாட்டு அலுவலர், 'சூபர்வைசர்', 'மெர்ச்சன்டைசர்' போன்ற பணியிடங்கள் உள்ளன.


மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை என வெளியூரை சேர்ந்தவர்கள், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா என வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என 4 லட்சம் தொழிலாளர்கள் வரை, திருப்பூரில் தங்கி, பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் சார்பு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.


திருப்பூரில் தொழில் துறை, ஆண்டுதோறும் சிறப்பான அளவில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. தற்போது, ஆண்டுக்கு, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் உள்நாட்டு ஆடை உற்பத்தி; ரூ.18,000 கோடி மதிப்பில் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்த போதிலும்கூட, தொழிலாளர் தேவையில் திருப்பூர் இன்னும் தன்னிறைவு பெறவில்லை.

பல நிறுவனங்களில், 40 முதல் 50 சதவீத தொழிலாளர்கள் பற்றாக்குறை தொடர்கிறது. தொழில் துறையினரின் கணிப்புப்படி, திருப்பூரில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிய உடனடியாக ஒரு லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆடை வர்த்தக மதிப்பை உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ள தொழில்துறையினர், புதிய தொழிலாளர்களை பணி அமர்த்துவதற்காக, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதோடு, தங்குமிடம், உணவு, இ.எஸ்.ஐ., - பி.எப்., போன்ற வசதிகளையும் செய்து தருகின்றனர். பெண் தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. வேறெங்கும் இல்லாத வகையில், ஆரம்ப காலத்தில் தொழிலாளர்களாக வந்த பலரும், இன்று சுயமாக நிறுவனங்கள் அமைத்து, தொழிலதிபர்களாக உருவெடுத்து, வெற்றிப்பாதையில் பயணிப்பதையும் காண முடியும்.


எனவே, வேலையில்லாமல் தவிப்போர், இனி கவலைப்பட தேவையில்லை. திருப்பூர் நோக்கி வந்தால், நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு; வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதிலும் ஐயமில்லை!


இவர்கள், வழிகாட்டுவர்!: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிவதற்கு, எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. பணிபுரிந்து கொண்டே, தொழில்சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். திறமையை வளர்த்துக் கொண்டு, நாளடைவில் வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.


அதேநேரம், வேலை தேடி திருப்பூருக்குள் புதிதாக நுழைவோர், இடைத்தரகர்களிடம் சிக்கி விடக்கூடாது; உங்கள் உழைப்பையும், கிடைக்க வேண்டிய சலுகைகளையும் சுரண்ட வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு, பின்னலாடை துறை சார்ந்த சங்கங்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. 'மெஷின் ஆப்ரேட்டர்', 'டெய்லர்', 'ஹெல்பர்', மேலாளர் என எந்த பணியில் சேர விரும்புவோராக இருந்தாலும், சரி, உங்களுக்கு எல்லாவகையிலும் சிறந்த வழிகாட்டியாக செயல்படுவர்.


ஏற்றுமதியாளர்கள் சங்கம் (டீ): 0421- 2220 606, 2220 506
ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா): 0421 - 2902 335, 77080 11123, 77080 11124
தொழில் பாதுகாப்பு குழு மற்றும்ஸ்ரீபுரம் அறக்கட்டளை: 73730 71005, 82200 32005
'சிஸ்மா' சங்கம் - 98430 12111
இச்சங்கங்களை, அலுவல் நாட்களில், காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment