Sunday, 2 November 2014

இதுவரை மின்சாரமே கண்டிராத தமிழக கிராமம்

மீனாட்சி ஊத்து கிராமத்தில் உள்ள ஒரு வீடு. சூரிய ஒளி மின்சக்தி விளக்கின் உதவியுடன் சமைக்கும் பெண். | படம்: ஜி.கார்த்திகேயன்.

.
இதுவரை மின்சாரத்தைக் கண்டிராத கிராமம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி ஊத்து என்ற கிராமத்திற்கு இன்னும் மின்சார வசதி வந்தபாடில்லை.
கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள பெரும்பாறை அருகே மணலூர் பஞ்சாயத்தின் கீழ் வரும் கிராமம் மீனாட்சி ஊத்து. இந்த கிராமத்தை இதுவரை மின்சாரம் வந்தடையவில்லை.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால் நகைமுரணாக அவர் சார்ந்த மாவட்டத்தில் ஒரு கிராமம் இதுவரை மின்சாரப் பயன்பாட்டையே அடைந்ததில்லை.

அந்தக்கிராமத்தைச் சேர்ந்த பண்ணைத் தொழிலாளி, கே.தங்கையா இது குறித்துக் கூறும்போது, “சூரியன் மறைவதற்குள் எங்களது அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம். பள்ளியில் படிக்கும் எனது 2 குழந்தைகளும் மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கின்றனர். ரூ.30 விலையில் 2 லிட்டர் கெரசின் ரேஷன் கடை மூலம் கிடைக்கிறது. ஆனால் மாதம் முழுதும் அது போதவில்லை. வெளிச்சந்தையில் கெரசின் விலை லிட்டருக்கு ரூ.60 என்று விற்கப்படுகிறது.” என்றார்.

கெரசின் வாங்கப் பணமில்லாமல் கொடிய பூச்சிகளுடன் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் இந்த கிராம மக்கள்.

மேலும் சமீபத்திய பெய்த மழையினால் வீட்டுச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. நிலச்சரிவின் அபாயத்தை எதிர்கொண்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

திமுக மற்றும் அதிமுக அரசுகள் கலர் டெலிவிஷன், மின்விசிறிகள், மிக்சிகள், கிரைண்டர்களை இலவசமாக அளித்தனர். ஆனால் இவர்கள் வீட்டில் இது அலங்காரத்திற்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. "மின்சாரம் இல்லாமல் எங்கிருந்து இவற்றைப் பயன்படுத்துவது?”என்று கேட்கிறார் முருகன் என்ற மற்றொரு பண்ணைத் தொழிலாளி.

மணலூர் பஞ்சாயத்தின் அனைத்து கிராமத்திலும் மின்சாரம் உள்ளது. மீனாக்‌ஷி ஊத்து கிராமத்தில் மட்டும் இல்லை.

மணலூர் பஞ்சாயத்துத் தலைவர் எம்.சி.ரத்தின குமார் இது பற்றி கூறும்போது, “அரசுக்கு இது பற்றி விவரங்கள் அனுப்பியுள்ளோம். சூரிய ஒளிசக்தி தெரு விளக்குக் கம்பங்களை பஞ்சாயத்து அமைத்துள்ளது. மீனாக்‌ஷி ஊத்திற்கு மின்சாரம் வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

இந்நிலையில், ஐதராபாத், தேசிய ஊரக வளர்ச்சி அமைப்புடன் இணைந்து காந்திகிராம அறக்கட்டளை மீனாக்‌ஷி ஊத்தில் உள்ள 27 குடும்பங்களுக்கு சூரிய விளக்குகளை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment