அசாம் மாநிலம் குவாஹாட்டியில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்ட புதிய ரயில். படம்: ரீதிராஜ் கன்வர்.
ரயில் நிலையங்களை தனியார்மயமாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் குவாஹாட்டி, மேகாலயத்தின் மெண்டிபாதரை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். குவாஹாட்டியில் நடைபெற்ற தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:
ரயில் நிலையங்களை ஏழை, நடுத்தர மக்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் ரயில் நிலையங்கள் தரம் திருப்திகரமாக இல்லை. விமான நிலையங்களைப் போன்று ரயில் நிலையங்களும் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
அதற்கு ரயில் நிலையங்களை தனியார்மயமாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் ரயில் நிலையங்கள் நவீனமாகும்.
ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனை ரயில்வே துறை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு குத்தகைக்கு அளிக்கலாம். இதன்மூலம் ரயில்வேக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரயில்வே துறை முதுகெலும்பாக விளங்கி வருகிறது. ஒரு ரயிலில் கூடுதலாக ஒரு பெட்டியை இணைப்பது மூலமோ, ஒரு ரயில் நிலையத்தை தரம் உயர்த்துவது மூலமோ பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது. அனைத்து ரயில் நிலையங்களும் உலகத் தரத்துக்கு இணையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். அப்போது இந்திய பொருளா தாரத்தின் என்ஜினாக ரயில்வே துறை உருவெடுக்கும்.
ரயில்வே துறையை நவீனமயமாக்க 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாட்டின் முக்கிய பகுதிகளில் 4 ரயில்வே பல்கலைக்கழகங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு ரயில்வே துறை சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்களும் கற்றுக் கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment