Wednesday 26 November 2014

சட்டமன்றத்துக்கு வந்து கருணாநிதி ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் : ஓ. பன்னீர் செல்வம்


டிசம்பர் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத்துக்கு வந்து திமுக தலைவர் கருணாநிதி ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என தமிழக முதல்வர்  ஓ. பன்னீர் செல்வம் அறிக்கையில் கூறியுள்ளார்.
கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் ஓ. பன்னீர்செல்வம் அளித்த அறிக்கையில், தி.மு.க தலைவர் கருணாநிதியும், அவருடன் பனிப்போர் தொடுத்திருக்கும் அவரது மகன் மு.க.ஸ்டாலினும் பேரவையைக் கூட்டுவது பற்றி தரம் தாழ்ந்த அறிக்கைகளை வெளியிடுவதும், விமர்சனங்கள் செய்வதையும் தொடர்ந்து வருகின்றனர்.
சட்டப் பேரவை நடவடிக்கைகள் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத கருணாநிதி, சட்டப் பேரவையைக் கூட்டாதது தமக்கு வருத்தமளிப்பதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது பற்றி 22.11.2014 அன்று விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
அதில், சட்டமன்றத்திற்கு வருவது என்பது கருணாநிதியைப் பொறுத்த வரையில் சட்டமன்றத்தின் தாழ்வாரத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடுவது தான், சட்டமன்ற உறுப்பினரின் தலையாயப் பணி என்பதை கருணாநிதி ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியதிலிருந்து மேற்கோள் காட்டி நான் விளக்கியிருந்தேன். ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ என்ற அடிப்படையில், கருணாநிதி கேள்வி-பதில் அறிக்கையில் நான் பிதற்றியிருப்பதாக தரம் தாழ்ந்து விமர்சித்ததோடு சட்டமன்றத்தைக் கூட்ட நான் பதற்றப்படுவதாகத் தெரிவித்து, ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு என்ன விலை?’ என்பது போல் பருப்பு வாங்கும் டெண்டரில் ராமதாஸ் கேள்விக்கு பதில் கூறட்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். பருப்பு பற்றி ராமதாஸ் கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் ஏற்கெனவே பதிலளித்துவிட்டார்.
ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு ஒன்றையும் அவர் தொடுத்துள்ளார் என்பதை கருணாநிதிக்கு இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த தி.மு.க ஆட்சியின் போது எப்படியெல்லாம் தரக்குறைவாக சட்டமன்றப் பேரவையின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஒரு சில உதாரணங்களை மட்டும் நான் தெரிவித்துள்ளேன். கருணாநிதியும், அவருக்கு பக்க பலமாக இருந்த அமைச்சர்களும், தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் செய்த இது போன்ற அராஜக செயல்களில் அஇஅதிமுக ஒரு போதும் ஈடுபடாது என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
எனவே, சட்டமன்றத்தில் தமிழக அரசை விமர்சிப்பதற்கு ஏதேனும் பொருள் இருக்கிறது என்று கருணாநிதி கருதுவாரேயானால், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், அவரது சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை பேச அனுமதிப்பாரேயானால், சட்டமன்றத்தில் எடுத்துரைக்கக் கூடிய கருத்துகள் ஏதேனும் இருக்குமானால், சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் கருணாநிதிக்கு உள்ளது என்றால், கருணாநிதி, 4.12.2014 அன்று கூட்டப்பட்டுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment