காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதை கண்டித்து 22-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு நாள் கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து கட்சிகளின் ஆதரவு கோர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி நீர் விவகாரத்தில் அரை நூற்றாண்டு காலமாக தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்து விடுவதில்லை. காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இந்நிலையில், காவிரி டெல்டா பகுதியை வஞ்சிக்கும் வகையில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.
இந்த அணைகளைக் கட்டினால் காவிரியை நம்பியுள்ள 13 டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படும். குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 14 லட்சம் ஏக்கர் பயிர்சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும். அத்துடன் குடிநீர் வளமும் பாதிக்கப்படும். எனவே, இது விவசாயிகள் பிரச்சினை மட்டுமல்ல. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, புதிய அணைகள் கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கோரி 22-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒருநாள் முழு அடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளது. எங்கள் கோரிக்கை தொடர்பாக பிரதமரை நேரில் சந்திக்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கடிதமும் கொடுத்துள்ளோம். மேலும், தமிழக முதல்வரை நேரில் சந்திக்கவும் முடிவு செய்துள்ளோம்.
கருணாநிதியுடன் சந்திப்பு
இன்று (நேற்று) காலையில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஆகியோரை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு வலியுறுத்தியுள்ளோம். எங்கள் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment