Tuesday, 4 November 2014

மகிழ்ச்சியின் ரகசியம்...!

 






இச்சமூகத்தில் நான் வாழ, எனது கடமையினை செய்ய, என்னுடைய அறிவை வளர்த்து கொள்ள, எனக்கு என்னவெல்லாம் தேவைப்படுகிறது என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்திக்கும் போது நமக்கு ஐந்து வகையான கடமைகள் உண்டு என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

1. தான்
2.குடும்பம்
3.சுற்றம்
4.ஊரார்,
5 உலகம். இவற்றில் முக்கியமானது மனதை வளமாகவும், நலமாகவும் வைத்து கொள்ளுதல்.

மனநிலையே அடிப்படை :

மனித வாழ்விற்கு மனநிலையே அனைத்திற்கும் அடிப்படை. மண்ணும், மனமும் ஒன்றே. மண் நஞ்சை, புஞ்சை என பிரிக்கப்படுகிறது. மனம், நேர்மறை, எதிர்மறை என பார்க்கப்படுகிறது. நேர்மறை, எதிர்மறையை பொறுத்துத்தான், வாழ்வில் அத்தனை விஷயங்களும் நடக்கின்றன. ஒருவர் ஒரு ரோஜா செடியை பார்த்து, “பூ அழகாக உள்ளதே!” என பார்ப்பது நேர்மறை. மாறாக “முட்களாக உள்ளதே” என நினைப்பது எதிர்மறை.நேர்மறை மனநிலை மகிழ்ச்சியின் உறைவிடம். மனித மனம் என்னவென்று தெளிவாக அறிந்து கொண்டால், நமக்கு தேவைப்படும் மகிழ்ச்சியின் அனைத்து ரகசியங்களும் தெரிந்து போகும். வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மிக முக்கியமானது மனநிலையே.

இலக்கு நோக்கி பயணம் :



பனிப்பாறைகளை பார்த்தோமானால், அவற்றில் 10 சதவீதம் தான் தண்ணீருக்கு வெளியே தெரியும். 90 சதவீதம் தண்ணீருக்குள்ளே இருக்கும். அது போலத்தான், நம் வாழ்க்கை எனும் பனிப்பாறையில், நம் அறிவுத்திறனும் பிறருக்கு புலப்படக்கூடியவை. பிறருக்கு புலப்படாத 90 சதவீதம், நாம் வாழ்க்கையை எப்படி மேற்கொள்கிறோம் என்ற மனநிலையை பொறுத்தே அமைகிறது. எனவே மனநிலையை நேர்மறையாக வைத்து கொண்டு, இலக்கை நோக்கி பயணம் செய்தல் வேண்டும்.“ராஜா ஒருவர் தன்படைகளோடு வேட்டையாட சென்றார். அப்போது, ராஜாவின் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. மந்திரியை தவிர, படைகள் அனைவரும் பரிதாபப்பட்டார்கள். அந்த மந்திரி நேர்நிலை மனநிலையோடு, “எல்லாம் நல்லதுக்குத்தான்” என்றார். ராஜாவிற்கு கோபம் வந்து, அவரை சிறைக்கு உட்படுத்தினார். சிறிது நேரம் கடந்து, ராஜாவும், படையும், காட்டு மிராண்டிகளிடம் அகப்பட்டு கொண்டனர். அவர்களின் தலைவர், தங்கள் குல வழக்கப்படி, காயம் இல்லாதவனை பலியிட ஆணையிட்டார். படைகள் அனைவரும் பலியிடப்பட்டனர். வெட்டுக்காயம் பட்டதால், ராஜா தண்டனையிலிருந்து தப்பிக்க முடிந்தது. அப்போது தான், ராஜா, தன் மந்திரி நேர்மறை மன நிலையோடு சொன்னதை உணர்ந்து திருந்தினார்.எதிர்மறை மன நிலைக்கு ஒரு குணம் உண்டு. அதாவது உடனடியாக ஒருவர் மனதில் வெகு எளிதாக எவ்வித பிரயத்தனமன்றி, எதிர்மறை மனநிலை உருவாகும். ஆனால் நேர்மறை மனநிலை எளிதாக உருவாகாது. நேர்மறை மனநிலை உருவாக கீழ்கண்ட உத்திகளை பயன்படுத்தினால், நேர்மறை பயிற்சி உண்டாகி நாளடைவில் அது வழக்கமாகி விடும்.

எளிதான உத்திகள்:



*பொது இடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ளுதல்.
*பிறருக்கு நல்ல முறையில் மரியாதை செய்தல்.
*எப்போதும் உற்சாக மனப்பான்மையுடன் இருத்தல்.
*பிறருடன் நல்ல நட்புறவுடன் செயல்படுதல்.
*எதிலும் வெளிப்படையான மனநிலையில் நடந்து கொள்ளுதல்.
*சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுதல்.
*எதையும் நகைச்சுவை உணர்வோடு பார்த்தல்.
*பிரச்னைகளை நல்ல முறையில்
சமாளிக்கும் திறமையை வளர்த்து கொள்ளுதல்.
*பொது இடங்களில் நாகரிகம் கருதி நாவை கட்டுப்படுத்துதல்.
*தன்னை பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புவது போல், நாம் பிறரிடம் நடந்து கொள்ளுதல்.
*பிறரை பாரட்டுங்கள். யாரை சந்தித்தாலும் 'இவரை நான் எப்படி பாராட்ட முடியும்' என்று யோசியுங்கள். அதை செயல்படுத்துங்கள்.
*சிறு குழந்தையாக மாறுங்கள். எதிர்மறை மனநிலை உங்களை விட்டு ஓடிப்போகும்.

நேர்மறை மனநிலை:


நேர்மறை மனநிலை என்பது 3 வழிகளில் செயல்படும். முதலாவதாக, உங்கள் பொதுவான மனநிலையை மாற்றும். இரண்டாவது, உங்களை சுற்றியிருக்கும் நபர்களில் நேர்நிலையின் தாக்கத்தை உருவாக்கும். கடைசியாக நீங்கள் வசிக்கும் சுற்றுப்புற சூழ்நிலையை மேம்படுத்தும்.
வாழ்க்கையில் எந்த இடையூறு வந்தாலும் நேர்நிலை மனோபாவத்தோடு எதிர்நோக்கினால், இன்னல்கள் பனிகளாய் உருகி விடும். எதிர்மறை மனநிலையோடு ஒருவர் வெளிப்படும்போது, கீழ்கண்ட கேள்விகளை கேட்டுப்பாருங்கள்.இந்த நபர் எனக்கு முக்கியமானவரா, இதற்கு முன் இவர் இது போன்ற மனநிலையை என்னிடம் வெளிப்படுத்தியுள்ளாரா? இந்த மனநிலை என்னை எந்தளவு பாதிப்படைய செய்கிறது, இந்த நபரின் எதிர்மறை மனநிலை மாறுகின்ற வரையில், பொறுத்துக் கொள்ள அவகாசம் தர நாம் தயாராக இருக்கிறோமா? இந்த நபரின் எதிர்மறை மனநிலையை மாற்றுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த நாம் தயாராக இருக்கிறோமா? இந்த கேள்விகளுக்கு ஒன்றிற்கு 'இல்லை' என்னும் பதில் வந்தால், தயை கூர்ந்து எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக சென்று விடுவதே உங்களுக்கு நல்லது. மாறாக ஏதேனும் ஒரு கேள்விக்கு, “ஆமாம்” என்றால் பொறுமையுடனும், அமைதியுடனும், நிதானத்துடனும் நேர்மறை எண்ணங்களோடு அந்த நபரை அணுகுங்கள். நிச்சயமாக உங்கள் பிரச்னை இடர் களைந்து வெற்றி காண்பீர்கள்.

“நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே மாறிவிடுவாய்” என்ற கீதையின் சொல்லுக்கிணங்க, அன்னப்பறவையை போல் தண்ணீர் கலந்த பாலில், பாலை மட்டும் பிரித்தெடுக்கும் ஆற்றலை போல நாமும் அன்றாட வாழ்வில், எதிர்மறை மனநிலையை விடுத்து, நேர்மறை எண்ணங்களோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும். நமக்கு தேவையான எல்லா வலிமையும், எல்லா சக்தியும் நமக்குள்ளேயே குடி கொள்ளும். பணம், படைப்பாக்கம், சாதனைகளை விட நேர்மறை மனநிலை நம் உயரங்களை தீர்மானித்து விடும்.ஒரு வாய்ப்பினை இழந்து விட்டதற்காக, கண்களில் கண்ணீரை நிரப்பிக் கொள்ளாமல் கண்களுக்கு முன் இருக்கும் இன்னொரு வாய்ப்பினை அறிந்து கொண்டு, வாழ்க்கையில் வெற்றி காண்போம்.
ஹேமாமாலினி,
முதல்வர், உமையாள் ராமனாதன்
மகளிர் கல்லூரி, காரைக்குடி.
email: hema_shg@yahoo.co.in.

No comments:

Post a Comment