ஒரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர், அதே வங்கியின் ஏ.டி.எம்-ல் ஒரு மாதத்தில் 5 முறையும், பெருநகரங்களில் இருந்தால் வேறு வங்கிகளின் ஏ.டி.எம்-ல் 3 முறையும் மற்ற இடங்களில் 5 முறையும் இலவசமாக வர்த்தகம் செய்யலாம் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு மேல் ஏ.டி.எம். பயன்படுத்தும்போதெல்லாம் வங்கிகள் அதற்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கலாம். சில வங்கிகள் இதற்கு மேலும் இலவச ஏ.டி.எம். பயன்பாட்டை அனுமதிக்கலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஏ.டி.எம். பயன்பாட்டுக்குக் கட்டணம் வசூலிப்பது சரியா?
2007-ல் இந்தியாவில் மொத்தமே 27,000 ஏ.டி.எம்-கள் இருந்தன. ஆனால் இன்று 1.7 லட்சம் ஏ.டி.எம்-கள் உள்ளன. ஏ.டி.எம். பயன்பாடு அதிகரிக்கும்போது, வாடிக்கையாளர்கள் வங்கியின் அலுவலகத்துக்கு வருவது குறைந்து, வங்கியில் வியாபாரச் செலவும் குறையும். அதே நேரத்தில், வாடிக்கையாளரின் இருப்பிடத்துக்கு அருகில் ஏ.டி.எம். வசதியை வழங்குவதிலும் செலவுகள் உண்டு. ஒரு வாடிக்கையாளர் வங்கியில் காசோலை மூலம் ஒரு முறை பரிவர்த்தனை செய்தால் வங்கிக்கு ஆகும் செலவு ரூ. 50 என்றால், அதே வேலையை ஏ.டி.எம்-ல் செய்யும்போது செலவு ரூ. 15-தான் ஆகிறது.
பரிவர்த்தனையில், கடனைத் திருப்பிக் கொடுப்பது போன்றவற்றுக்குக் காசோலையைப் பயன்படுத்த முடியும் என்பதுதான் சேமிப்புக் கணக்கை ஆரம்பிப்பதற்கு மிகப் பெரிய தூண்டுதல். இதில் ஒரு மாதத்தில் எத்தனை காசோலை பயன்படுத்தலாம் என்பதிலும் கட்டுப்பாடு உண்டு. காசோலை பயன்படுத்தும் முறையில் அதிக செலவாவதும், அதனை வங்கியே ஏற்பதும் நமக்குத் தெரியும். இதில் எல்லாரும் காசோலையை மட்டுமே பயன்படுத்தினால், வங்கியின் செலவுகள் அதிகமாகி, சிறுசேமிப்பு மீது வங்கி அளிக்கும் வட்டி விகிதம் குறையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, காசோலையைவிட ஏ.டி.எம். பண அட்டையின் (டெபிட் கார்டு) பயன்பாட்டை உயர்த்துவது வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் லாபம்தான்.
கிராமத்திலும் நகரத்திலும்
நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளில் வாடிக்கை யாளர்கள் அதிக அளவு பணம் வைத்திருந்து, தேவைப்படும்போது போதுமான தொகையை ஏ.டி.எம். மூலம் பெறுவதால், இந்தக் கட்டணத்தைக் குறைக்க முடியும். எல்லா இடங்களிலும் ஏ.டி.எம்-ன் பயன்பாடு ஒரே அளவில் இருக்குமா? சிறு நகரங்களில், ஊர்ப்புறங்களில் சில நூறு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஏ.டி.எம். வைக்கும்போது சராசரியாக ஒரு ஏ.டி.எம்-மைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும், அதனால் செலவும் அதிகமாகும். பெருநகரங்களில் ஏ.டி.எம். பயன்பாடு அதிகமாகி, செலவு குறைவாக இருக்கும். இவ்வாறு ஏற்படும் செலவுகளைச் சமன்படுத்தி, எல்லா வாடிக்கையாளர்களிடமும் ஒரே அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வங்கிகள் நமக்குத் தரும் பண அட்டை, கடன் அட்டை (கிரெடிட் கார்டு) போன்றவற்றைப் பயன்படுத்திக் கடைகளில், இணையதளங்களில் பணம் செலுத்துகிறோம். இதற்காகக் கடைகளில் உள்ள சிறு இயந்திரத்தில் நமது அட்டையை உரசிப் பணம் எடுக்கும் முறையைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு பாய்ன்ட் ஆஃப் சேல் (PoS) இயந்திரம் என்று பெயர். இதில் 1,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு 15-லிருந்து 20 ரூபாய் வரை செலவாகும். பெரும்பாலும் இதனை வியாபாரி ஏற்றுக்கொள்வார்; அல்லது சில வியாபாரிகள் நம்மிடமிருந்து வசூலிப்பார்கள். இணையதள வங்கிச் சேவைக்கு 10 ரூபாய் வரை செலவாகும். இவ்வாறு காசோலை இல்லாத மற்ற எல்லா வகைப் பணமாற்றத்துக்கும் குறைவாகவே செலவாகும் என்பதால், இவற்றை வங்கிகளும் ரிசர்வ் வங்கியும் ஊக்குவிக்கின்றன.
நாமும் இந்த வகை பணப் பரிவர்த்தனையை அதிகமாகப் பயன்படுத்தும்போதுதான் அதற்கான செலவுகள் குறையும். வங்கிகள் மூலம் பணம் செலுத்துவதால் நமது செலவுகளெல்லாம் கணக்கில் வரும் என்பதால், வியாபாரிகளும் நுகர்வோரும் வியாபாரத்தின்போது வரி ஏய்ப்புக்காக பண அட்டையைத் தவிர்த்துவிட்டு ரொக்கத்தைப் பயன்படுத்துவார்கள். எனவே, கருப்புப் பணத்தைக் குறைக்கவும் பண அட்டை மூலமாக நடை பெறும் பணமாற்றம் உதவும்.
No comments:
Post a Comment