Thursday, 6 November 2014

ஊட்டச்சத்து குறைபாடு ஏன்? சரிவிகித உணவு அவசியம்!


ஊட்டச்சத்து குறைபாடு என்பது பல்வேறு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்; அது பிடிக்காது, இது பிடிக்காது என, பால், கீரை, தானியம், காய்கறி, கேழ்வரகு போன்ற தானியங்கள் கலந்த, சரி விகித உணவு இருந்தால், இந்த குறைபாட்டில் இருந்த தப்பலாம் என்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.

ஊட்டச்சத்து குறைபாடு என்பது, வளர் இளம் பருவம், கர்ப்ப காலம், தாய்ப்பால் ஊட்டும் காலம், வயதான காலத்திலும் ஏற்படும். தேவைக்கு குறைவான ஊட்டச்சத்து எடுத்துக் கொள்ளுதல், ஊட்டச்சத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை குறைவு, நோய் பாதிப்பு, மாத்திரைகளின் பயன்பாடு, இழப்பு ஏற்படுவதாலும் பாதிப்பு வரும்.இளம் வளர் பருவம் என்பது, 12 முதல் 16 வயது வரையிலான காலம். இந்த காலத்தில், அதிக அளவில் ஊட்டச்சத்து தேவைப்படும். கவனிக்கத் தவறினால், அவர்களின் வளர்ச்சி விகிதம் மாறுபடும்.மாதவிடாய் காலம், விபத்து, அறுவைச் சிகிச்சையின்போது ஏற்படும் இழப்பு, எலும்பு பாதிப்பு, புற்றுநோய், மது பழக்கம் உள்ளோருக்கும் இந்த பாதிப்பு வரும்.வயதான காலத்தில், மென்று சாப்பிட முடியாது என, பலரும் கஞ்சி எடுத்துக் கொள்கின்றனர்; அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. பல்வேறு நோய்களுக்கு மாத்திரைகள் சாப்பிடும்போது, ஒரு சில மாத்திரைகளால், ஊட்டச்சத்தை, முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

'நான் சுத்த சைவம்' என, கூறுபவர்களில் சிலர், பாலை விரும்பி குடிப்பதில்லை. இதனால், 'வைட்டமின் - பி 12' பாதிப்பால், அனீமியா பாதிப்பு வரும். நரம்பு பாதிப்பால், கால், கை உடலில் ஊசி குத்துவது போன்ற வலி ஏற்படும்; மரத்து போகலாம். தொடர்ந்து மது பழக்கம் உள்ளோருக்கு நரம்பு தளர்ச்சியால் கை, கால் ஆடும். எனவே, வயது, எந்த மாதிரி வேலை செய்கிறோம்; ஆணா, பெண்ணா, எந்த மாதிரியான நோய் பாதிப்புகள் உள்ளதா என்பதைப் பொறுத்து, ஊட்டச்சத்து தேவை மாறுபடும். பொதுவாக இரும்புச்சத்து குறைவு உள்ளோருக்கு, வைட்டமின் - சி, வைட்டமின் - பி 12, போலிக் ஆசிட், புரதச் சத்து சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காய், கொய்யாப்பழம், கீரை வகைகள், பால், அசைவ உணவுகள், கடலை வகைகள், கார்டன் கிரஸ்ஸ் விதைகள், அவல், ஓட்ஸ், ஈரல், ஆட்டு ரத்தம், கேழ்வரகு இதை எடுத்துக் கொள்ளலாம்.

எதையாவது ஒன்றை தொடர்ந்து சாப்பிடுவது சரியல்லை. 'இது எனக்கு பிடிக்காது, அது பிடிக்காது' என, ஒதுக்கக் கூடாது. ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு விதமான ஊட்டச்சத்து உள்ளதால், எல்லாவற்றையும் கலந்து, சரிவிகித உணவாக சாப்பிடலாம். இந்த நடைமுறை பின்பற்றினால், ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்துதப்பலாம். இன்னும் சொல்வது என்றால், ஐந்து கை அளவு காய்கறி, கீரை, பழம், சுண்டல் வகைகள் சாப்பிட்டால் வைட்டமின், மினரல் சத்துக்கள் கிடைக்கும் என்பதால், ஊட்டச்சத்து குறைபாடில் இருந்தால் தப்பலாம்.இப்படி கூறுகிறார் மீனாட்சி பஜாஜ்.

காரக்குழம்பு பிரியரா... கவனம் தேவை!

*காரக்குழம்பில், புளி அதிகம். தொடர்ந்து புளி அதிகம் உள்ள காரக்குழம்பு சாப்பிடுவதும், இரும்பு சத்து குறைவால், ரத்த சோகை வரும்.
*சுண்ணாம்பு சத்துள்ள உணவுப் பொருட்களுடன், (பால், உலர் பழங்கள்) இரும்புச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது; இரண்டுக்கும் ஒரு மணி நேர இடைவெளி தேவை.இரும்புச் சத்து பொருட்கள் சாப்பிடும்போது, வைட்டமின் - சி சேர்த்து சாப்பிட வேண்டும்.
* சிக்கன் மீது, எலுமிச்சை சாறு விட்டுத் தருவது வழக்கம். காரணம், சிக்கனில் உள்ள இரும்புச் சத்தை, எலுமிச்சையில் உள்ள, வைட்டமின் - சி, இரும்புச் சத்தை முழுமையாக ஏற்க உதவும்.

No comments:

Post a Comment