Saturday 22 November 2014

வக்ஃபு வாரிய சொத்துக்களை மீட்க சட்டத்திருத்தம்: தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் வலியுறுத்தல்



வக்ஃபு வாரிய சொத்துக்களை மீட்க சட்டத்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன் வலியுறுத்தினார்.
 ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 தமிழகத்தில் மத்திய வக்ஃபு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையில் சனிக்கிழமை ஆய்வு செய்த மத்திய அதிகாரிகள், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் வக்ஃபு வாரியம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டியுள்ளனர்.

 ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, மீட்கப்பட்டுள்ள வக்ஃபு வாரிய சொத்துக்கள் குறித்த மத்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வக்ஃபு வாரிய சொத்துக்களை மீட்பதில் இப்போது பல்வேறு நடைமுறை, சட்டச்சிக்கல்கள் உள்ளன. எனவே, வக்ஃபு வாரிய சொத்துக்களை எளிதாக மீட்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 வக்ஃபு வாரிய மேம்பாட்டு நிதிக்காக, ஜெயலலிதா ரூ.3 கோடி ஒதுக்கினார். அதைத்தொடர்ந்து மேம்பாடு நிதியை தனியாரிடம் திரட்டலாம் என அரசாணை பிறப்பித்துள்ளார். இந்த நிதி மூலம் ஏழை இஸ்லாமியர்களின் வாழ்கையை முன்னேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 இஸ்லாமியர்களின் பாதுகாவலர் போல திமுக தலைவர் கருணாநிதி காட்டிக்கொள்வார். ஆனால், இஸ்லாமியர்கள் கோரிக்கை வைக்காமலே பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார். கருணாநிதியின் சூழ்ச்சியால் இஸ்லாமிய கட்சிகள், அமைப்புகள் சிதறி இப்போது 26 அமைப்புகளாக செயல்பட்டு வருகின்றன.

 காயிதேமில்லத்தின் மகன் மியாகானுக்கு சட்டப்பேரவையில் மேலவை உறுப்பினர் பதவி வழங்கியது எம்ஜிஆர் தான். காயிதேமில்லத் பேரன் தாவூத்மியாகானுக்கு பேரவைத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார்.
 இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அச்சாரம் போட்டது ஜெயலலிதா தான். கடந்த ஆண்டு ரமலான் நோன்புக்காக ரூ.3,500 மெட்ரிக் டன் அரிசியும், இந்த ஆண்டு ரூ.4,700 மெட்ரிக் டன் அரிசியும் வழங்கப்பட்டது. உலமாக்களுக்கு ஓய்வூதியம், விலையில்லா மிதிவண்டிகள் அறிவித்தது ஜெயலலிதா தான் என்றார்.
 பேட்டியின்போது வக்ஃபு வாரிய உறுப்பினர் எஸ்.ஏ.பாரூக் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment