Sunday 23 November 2014

போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் திருவாரூர்

 கமலாலயக் குளக்கரை இடிந்து விழுந்ததால், அந்த வழியே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலயக் குளக்கரையின் வடக்குப் பகுதியில் தொடர் மழை காரணமாக சுமார் 200 மீட்டர் தொலைவுக்கு 2012 அக்டோபரில் இடிந்து விழுந்தது.

சேதமான குளக்கரை சாலை திருவாரூர் நகருக்குள் வந்து செல்ல கனரக வாகனங்களை உள்ளிட்டவை பயன்படுத்தி வந்த சாலையாகும். பழைமையான கட்டடம் என்பதால் குளக்கரை ஓரத்தில் ஈரம் அதிகமாகி, கனரக வாகனங்கள் சென்றதால் மதில்சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து, குளத்தின் கிழக்கு, தெற்கு, மேற்குகரை பாதை போக்குவரத்து சாலையாக மாற்றப்பட்டு அதில், பேருந்து, லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட்டன. வடக்குக் கரை சாலை தடை செய்யப்பட்டதால், சற்று தொலைவில் உள்ள முதலியார் தெரு வழியாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்கப்பட்டு, தற்போது அச்சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மயிலாடுதுறை, காரைக்காலிருந்து வரும் வாகனங்கள் வடக்குவீதி, கீழவீதி, பனகல் சாலை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. 

திருவாரூர் நகரிலுள்ள சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளதால், நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசலை மக்கள் சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே, கமலாலயக் குளத்தின் மேற்குகரை 2014 அக். 25-ம் தேதி சுமார் 64 மீட்டர் தொலைவுக்கு இடிந்து விழுந்தது. குளக்கரைச் சுற்றுச் சுவர் மேலும் இடிந்து விழலாம் அல்லது பாதிப்புக்கு உள்ளாகலாம் என்று குளத்தின் நான்கு பகுதி சாலையும் முற்றிலுமாக தடுப்புக் கட்டைகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். போக்குவரத்து தடையால், கும்பகோணம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நாகை - தஞ்சை சாலை வழியாகவும், மயிலாடுதுறையிலிருந்து வரும் வாகனங்கள் வடக்குவீதி, கீழவீதி வழியாக ராஜாஜி சாலை வழியாகவும் செல்கிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள நகரச் சாலைகள் அனைத்துமே மிகக் குறுகிய வணிக நிறுவனங்கள் உள்ள சாலை. எனவே, திருவாரூர் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். இதற்கிடையில், பனகல் சாலை விரிவுப்படுத்தும் பணியைத் தொடர்ந்து அண்மையில் தார் சாலை போடும் தொடங்கியது. கீழ வீதியிலிருந்து பனகல் சாலையில் எஸ்பிஐ வங்கி வரை போடப்பட்டுள்ள தார் சாலை இப்போது மோசமாகிவிட்டது.

மீதம் போடவேண்டிய சாலைப் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அச்சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. பனகல் சாலையில் அனைத்து வாகனங்களும் இயக்கப்படுகிறது. வாகனங்கள் செல்லும் போது புழுதிக் காற்று இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பனகல் சாலையை சீரமைப்பதுடன், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள அரைவட்ட சுற்றுச் சாலையை அமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment