Saturday, 29 November 2014

காவிரியில் புதிய அணைகள்: இன்று நடக்கவிருந்த மறியல் - டிச. 4-க்குஒத்திவைப்பு

 

காவிரியில் புதிய அணைகள் கட்டும் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் கனமழை காரணமாக டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலர் வே.துரைமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலர் பெ.சண்முகம் ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ. 29) சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், இந்த மறியல் போராட்டம் டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
ஏற்கெனவே திட்டமிட்டிருந்த அனைத்து இடங்களிலும் ரயில் மற்றும் சாலை மறியல் போராட் டங்கள் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
காரைக்காலிலும் ஒத்திவைப்பு
இதேபோல, கர்நாடக அரசைக் கண்டித்து காரைக்கால் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் இன்று நடைபெறவிருந்த முழு அடைப்புப் போராட்டமும் மழை காரணமாக டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment