Thursday, 27 November 2014

அழிந்து வரும் நிலையில் பன்னீர் திராட்சை விவசாயம்




பத்தாண்டுகளுக்கு முன்பு 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்ற திராட்சை விவசாயம் இப்போது 500 ஏக்கராக குறைந்துவிட்டது.
திராட்சை விவசாயம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாற்று விவசாயத்துக்குச் சென்றுவிட்டனர். இது தவிர சமீபத்தில் பெய்த மழையில் ரூ.10 கோடி மதிப்புள்ள திராட்சை பாழாகிவிட்டது. எஞ்சியிருக்கும் திராட்சை விவசாயிகளும் இந்தத் தொழிலை இன்னமும் தொடரத்தான் வேண்டுமா என்கிற மனக் குழப்பத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள் கோவை மாவட்ட திராட்சை விவசாயிகள் சங்கத்தினர். கம்பம், தேனியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட திராட்சை விவசாயம் தற்போது 7 ஆயிரம் ஏக்கருக்கும் கீழே சரிந்துவிட்டது.
கோவையில் 2 ஆயிரம் ஏக்கரில் இருந்து 500 ஏக்கராகிவிட்டது. இதுகுறித்து கோவை மாவட்ட திராட்சை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் விஜயன் கூறியதாவது: இந்த திராட்சை விவசாயிகள் சங்கம் 1992-ல் 200 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு வரை கோவையில் 3 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்ற திராட்சை விவசாயம் தற்போது 500 ஏக்கரில் மட்டும்தான் நடைபெறுகிறது. அநேகம் பேர் இந்த விவசாயத்திலிருந்து காய்கறி விவசாயத்துக்குச் சென்றுவிட்டார் கள். தேனி, கம்பத்திலும் இதே மோசமான நிலைமைதான். உற்பத்தி செலவு அதிகரிப்பு, கட்டுபடியாகாத விலை போன்றவைதான் இதற்கு முக்கிய காரணம்.
ஒரு ஏக்கர் திராட்சை விவசாயம் செய்ய ரூ.5 லட்சம் முதலீடு வேண்டும். கொடிக்கால்கள் கட்டி, வேலி போட்டு, பயிரிட்டு, மராமத்து வேலைகள் செய்து முதல் அறுவடை எடுக்க 18 மாதங்கள் ஆகும். அதுவரை செலவை தாக்குப்பிடிக்க வேண்டும். அரசாங்கம் சார்பாக கடன் உதவி, மருந்துகள், நவீன தொழில் நுட்பம் போன்ற எந்த உதவியும் திராட்சை விவசாயிகளுக்கு கிடைப் பதில்லை. கோவையில் முன்பு திராட்சை விவசாய ஆராய்ச்சி மையம் ஒன்று இயங்கியது. அதுவும் இப்போது இல்லை. வேளாண்மை பல்கலைக்கழகத்தில் திராட்சை விவசாயம் குறித்த ஆலோசனைகளை கேட்டால் அவர்கள் காது கொடுப்பதே இல்லை.
மேலும் மருத்துவக் குணம் மிக்க பன்னீர் திராட்சையின் விற்பனை மற்றும் அதன் மகத்துவத்தை சீட்லஸ் திராட்சைகளின் விற்பனையும் மக்களின் விருப்பமும் வெகுவாக பாதித்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். கடந்த ஆண்டுகளில் பன்னீர் திராட்சையின் உற்பத்தி செலவே கிலோவுக்கு ரூ.20 ஆகும் நிலையில் அதன் விலையோ ரூ.7-க்கும் கீழே குறைந்துவிட்டதால் பாதி விவசாயிகளுக்கு மேல் இந்தத் தொழிலை விட்டுச் சென்றுவிட்டார்கள்.
பன்னீர் திராட்சை விவசாயிகளின் வாழ்க்கையை ஒளிர்விக்க தமிழகத்தில் ஒயின் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்பது எங்களுடைய நீண்டகாலக் கோரிக்கை. எந்த அரசாங்கமும் இதை அக்கறையுடன் கவனிக்கவே இல்லை. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையில் பூவும், பிஞ்சுமாக இருந்த திராட்சைகள் அழுகி, கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ.10 கோடிக்கும் மேல் நஷ்டம். இப்படியே போனால் பன்னீர் திராட்சை என்பது இன்னும் 5 ஆண்டு காலத்துக்குள் தமிழகத்தில் அழிந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment