திருவாரூரில் பொம்மை தயாரிப்பதை குடிசை தொழிலாக செய்யும் ராஜஸ்தான் தொழிலாளர்கள் அரசின் சலுகைகள் வழங்கப்படுமா?
திருவாரூரில் பொம்மை தயாரிப்பதை குடிசை தொழிலாக செய்யும் ராஜஸ்தான் தொழிலாளர்கள், அரசு தங்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கலைநயம்திருவாரூர்–மயிலாடுதுறை சாலையில் உள்ளது சேந்தமங்கலம். இங்கு 10 பேரை கொண்ட குழுவினர் கடந்த 7 ஆண்டுகளாக சாலை ஓரத்தில் வசித்து வருகிறார்கள். கலை நயம் மிக்க பொம்மைகளை தயாரித்து விற்பதை குடிசை தொழிலாக செய்து வரும் இவர்கள், ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தொழிலாளர்கள். அங்கிருந்து பிழைப்பு தேடி நாடோடியாக வெவ்வேறு ஊர்களுக்கு சென்று, ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தொழிலை செய்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள், திருவாரூர் சேந்தமங்கலத்தில் பொம்மைகளை சொந்தமாக தயாரித்து, விற்பனை செய்து தொழில் செய்து வருகிறார்கள். சாலை ஓரத்தில் குடிசை அமைத்து எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும், இவர்கள் தயாரிக்கும் பொம்மைகள் ஒவ்வொன்றும் உயர்ந்த கலை நயத்துக்கு எடுத்து காட்டாக விளங்குகின்றன. வாழ்க்கை நடத்த சளைக்காமல் முயற்சி செய்து வரும் இவர்களில் ஒரு சிலருக்கே தமிழ் பேச வருகிறது.
தேங்காய் நார்தேங்காய் நார், கிழங்கு மாவு, ரப்பர் பால் ஆகியவற்றை பொம்மை தயாரிப்பதற்கு மூலப்பொருட்களாக ராஜஸ்தான் தொழிலாளர்கள் எடுத்து கொள்கிறார்கள். தேங்காய் நாரை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்தும், ரப்பர் பாலை குஜராத்தில் இருந்தும் வரவழைத்து இவர்கள் வடிவமைக்கும் பொம்மை வண்ணங்களால் சிரிக்கிறது. தேங்காய் நாரால் செய்யப்பட்ட அச்சையும், ரப்பர் பாலால் உருவாக்கப்பட்ட அச்சையும் சேர்த்து, அதில் கிழங்கு மாவு பூசி பொம்மைகளை வடிவமைக்கிறார்கள். ஒவ்வொரு பொம்மைக்கு ஒவ்வொரு விதமான அச்சை இவர்களே உருவாக்கி வைத்து உள்ளனர். அதில் பொம்மைகளை வடிவமைக்கும் இவர்களின் கைவண்ணம் வியக்க வைக்கிறது. பொம்மையின் அளவுக்கு ஏற்ப விலை நிர்ணயித்து விற்பனை நடக்கிறது. விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, யானை, சாய்பாபா, திருஷ்டி பொம்மைகள் மற்றும் பல்வேறு விதமான பொம்மைகளை தயார் செய்து பல ஆண்டுகளாக கிடைக்கும் சொற்ப வருவாயில் வாழ்க்கை நடத்தும் இவர்கள், அரசின் சலுகைகள் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சாதடி கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் கூறியதாவது:–
வீடு கட்டி தருவார்களா?எங்கள் சொந்த ஊரில் பிழைப்புக்கு ஏற்ற வசதிகள் இல்லை. ஆகையால் 20 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரை விட்டு கிளம்பினோம். நாடோடியாக பல ஊர்களை சுற்றினோம். தமிழ்நாட்டில் முதலில் சென்னையில் தான் பொம்மை விற்கும் தொழிலை செய்து வந்தோம். திருவாரூர் சேந்தமங்கலத்திற்கு வந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. இங்கு சாலை ஓரத்தில் குடிசை அமைத்து தொழில் செய்து வருகிறோம்.
பொம்மை தயாரிக்க பயன்படும் கிழங்கு மாவு ஒரு மூட்டை ரூ.800–க்கு கிடைக்கிறது. இதை கொண்டு 30 சிறிய அளவிலான பொம்மைகளையே தயாரிக்க முடியும். ஒரு பொம்மையை தயாரிக்க ரூ.60 வரை செலவாகிறது. ஆனால் பொம்மையை வாங்க வருபவர்கள் கேட்கும் விலைக்கு விற்று விடுகிறோம். இதனால் போதிய அளவு லாபம் கிடைப்பதில்லை. நாடோடியாக பல ஊர்களுக்கு சென்று பிழைப்பு நடத்தும் எங்களுக்கு அரசின் எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சாலை ஓரத்தில் குடிசையில் வாழ்ந்து வருகிறோம். அரசு செயல்படுத்தும் ஏதாவது ஒரு திட்டத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். எங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment