Sunday, 13 March 2016

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசியல் கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டும்'


தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து அரசியல் கட்சியினரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று திருவாரூர் கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி கூறினார்.
திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அவர் பேசியது:
வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, மிரட்டுவது, ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களுடைய  ஆதரைவக் கோரக்கூடாது.
வாக்குப் பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிகிற 48 மணிநேர கால அளவில் பொதுக் கூட்டங்களை நடத்துதல், வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வர போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல் மற்றும் வாக்காளர் சின்னங்களை குறிக்கும் விதமாக எத்தகைய பொருள்கள், காகிதத்துண்டுச் சீட்டுகள் வழங்குதல் போன்றவற்றை செய்யக்கூடாது.
அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், பிற கட்சிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் இடையூறு செய்யக் கூடாது. போக்குவரத்தைக் கட்டுப்படுத்தச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவசியமான நடவடிக்கைகளைக் காவல்துறை மேற்கொள்ள அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் நடத்தும் கூட்ட இடம், நேரம் ஆகியவை குறித்து உரிய காலத்துக்கு முன்னதாகவே காவல்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட காலத்துக்கு மேல் கூட்டங்கள் நடத்தக் கூடாது. கூட்டம் நடத்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.
பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு அதில் அமைக்கப்பட உள்ள ஒலிபெருக்கி ஆகியவை குறித்து உரிய அனுமதியை வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பெற வேண்டும்.
உரிமம் பெறாத பிரசார வாகனங்களை பறிமுதல் செய்து குற்றவியல் நடவடிக்கைக்கு உள்படுத்த வேண்டும். பிரசார வாகனத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. அரசு பொது இடங்கள், கட்டடங்கள் ஆகியவைகளில் தேர்தல் விளம்பரம் எழுதுதல் கூடாது. சுவரொட்டிகள் ஏதும் ஒட்டக்கூடாது. கட்-அவுட்டுகள் வைக்கக் கூடாது. தனியார் கட்டடங்கள் மற்றும் சுவர்களில் அனுமதி ஏதும் பெறாமல் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது.
அரசு பொது கட்டடங்கள், சாலை குறியீட்டு பதாகைகள் சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் உள்ள சாலை வழிகாட்டி பலகைகள், நெடுஞ்சாலைகளிலுள்ள மைல்கற்கள், மேம்பாலங்கள் போன்ற இடங்களில் அரசு சொத்தில் தோற்றத்தை சீர்குலைப்பதில் ஈடுபட்ட அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மீது வழக்கு தொடரப்படும். இவ்வாறு பொதுத்துறை கட்டட சுவர்களில் எழுதப்பட்ட விளம்பரங்கள் விடியோ எடுத்து அவற்றை வெள்ளை அடித்தல் போன்ற நடவடிக்கைகள் காவல்துறையினரின் உதவியுடன் எடுத்து அகற்றப்படும். அதற்கான செலவினங்களை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்தும் வேட்பாளர்களிடமிருந்தும் வசூலிப்பதுடன் அதனை சம்பந்தப்பட்ட வேட்பாளர் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும் என்றார் முத்துமீனாட்சி.

No comments:

Post a Comment