Monday 21 March 2016

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தீவிரம்:இணையதளத்தில் 1.18 லட்சம் பேர் விண்ணப்பிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. பட்டியலில் பெயர் சேர்க்க 1.18 லட்சம் பேர் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளர்.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-இல் வெளியிடப்பட்டது. இருப்பினும், பெயர் சேர்க்க இணையதளம் மூலம் ஏப்ரல் வரை விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
363 சேவை மையங்கள்: இதற்காக வட்டாட்சியர், வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் (ஆர்.டி.ஓ), மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ளிட்ட இடங்களில் 363 சேவை மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், திருத்தங்கள் செய்தல், புதிதாக வாக்காளர் அடையாள அட்டை, பழைய அட்டையை மாற்றுதல் உள்ளிட்டவற்றுக்கு எளிய முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை இலவசமாகவும், அட்டையை மாற்ற வேண்டுமென்றால் ரூ.25 கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆகவே, புதிய அட்டைகளைப் பெற ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுதவிர, மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரிகள் மூலமும், தனியார் இணையதள மையங்கள் மூலமும் விண்ணப்பித்து வருகின்றனர். குறிப்பாக, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை ஆர்வம் அதிகமாக உள்ளது.
ஞாயிற்றுக்கிழமையும் இயங்கிய மையங்கள்: அனைத்து வாக்காளர்களின் பெயரைச் சேர்க்கும் முயற்சியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுதவிர, 100 சதவீதம் வாக்குப் பதிவு என்ற கோஷத்தையும் தேர்தல் ஆணையம் முன்வைத்து, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்காக விழிப்புணர்வு பிரசாரங்களும் நடைபெறுகின்றன. இதனால் பட்டியலில் பெயர் சேர்க்க ஏராளமானோர் திரண்டுள்ளனர்.
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை சேவை மையங்கள் இயங்கின. இவற்றில் ஏராளமானோர் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
1.18 லட்சம் பேர் விண்ணப்பிப்பு: 32 மாவட்டங்களில், இணையதளத்தில் பெயர் சேர்ப்பதற்காக மட்டும் இதுவரை மொத்தம் 1.18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14,023 பேரும், குறைந்தபட்சமாக நீலகி மாவட்டத்தில் 455 பேரும் விண்ணப்பித்துள்ளர்.
பெயர் நீக்கம் செய்யக் கோரி மொத்தம் 1.70 லட்சம் பேரும், வாக்காளர் பட்டியல் விவரங்களை திருத்தம் செய்வதற்கு 74,328 பேரும், தொகுதிக்கு உள்ளேயே முகவரி மாற்றம் செய்ய 23,465 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment