பேரளம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனைதமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 16–ந் தேதி நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 12 பறக்கும்படையினர், 12 நிலை கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரளம் அருகே உள்ள கோவில்கந்தங்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து கொல்லுமாங்குடி நோக்கி வந்த ஒரு காரை பறக்கும் படையினர் மறித்து சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி காரில் ரூ.1 லட்சம் இருப்பது தெரியவந்தது.
ரூ.1 லட்சம் பறிமுதல்இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கொல்லுமாங்குடியை சேர்ந்த ஜாகீர்உசேன் என்பது தெரியவந்தது. பின்னர் நன்னிலம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அம்பிகாபதியிடம் பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். அவர் அப்பணத்தை கருவூலத்தில் செலுத்தினார்.
திருத்துறைப்பூண்டிஅதேபோல திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமார் தலைமையில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி–வேதாரண்யம் சாலையில் சங்கிலிவீரையன் கோவில் அருகில் தேர்தல் துணை தாசில்தார் காரல்மார்க்ஸ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வேதரத்தினம், ஏட்டுகள் மணிமாறன், ரமேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிளை பறக்கும் படையினர் மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 7 செல்போன்கள், செல்போன் உதிரிபாகங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்போன் மற்றும் உதிரிபாகங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து மோட்டார்சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ராகேஷ்(வயது24) என்பதும், வேதாரண்யத்தில் உள்ள செல்போன் கடைக்கு அவற்றை எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பொருட்களை திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment