Thursday 10 March 2016

தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரெயில்கள் தாமதம்














நீடாமங்கலம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் ரெயில்கள் தாமதமாக சென்றன. விரிசல் ஏற்படுவதற்கு நாசவேலை காரணமா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தண்டவாளத்தில் விரிசல்

மன்னார்குடியில் இருந்து மானாமதுரைக்கு பயணிகள் ரெயில் தினசரி இயக்கப்படுகிறது. வழக்கம்போல் நேற்று காலை 6.30 மணி அளவில் பயணிகள் ரெயில் மன்னார்குடியில் இருந்து மானாமதுரை புறப்பட்டது. நீடாமங்கலம் அருகே உள்ள சம்பாவெளி என்ற இடத்தில் ரெயில் சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் சம்பாவெளி பகுதியில் உள்ள தண்டவாளத்தில் 1½ அடி நீளத்துக்கு விரிசல் ஏற்பட்டிருந்ததை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து, சம்பாவெளி ரெயில்வே கேட் கீப்பர் உலகநாதனிடம் கூறினர். அவர் நீடாமங்கலம் ரெயில் நிலைய கண்காணிப்பாளர் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் நீடாமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த மானாமதுரை ரெயில் விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு முன்பாக நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டன.

ரெயில்கள் தாமதம்

இதையடுத்து தண்டவாள ஆய்வாளர்கள் பிரபாகரன், ராதாகிருஷ்ணன் மற்றும் நீடாமங்கலம் ரெயில் நிலைய தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சீரமைக்கும் பணி முடிவடைந்ததும் மானாமதுரை ரெயில் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இதேப்போல கோவையில் இருந்து மன்னார்குடிக்கு வரும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக நீடாமங்கலம் வந்தது. மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில் வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. காலை நேரத்தில் 3 ரெயில்கள் தாமதம் ஆனதால் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

நாசவேலை காரணமா?

நீடாமங்கலம் வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தண்டவாளத்தில் விரிசலை ஏற்படுத்துவதற்காக யாரேனும் நாச வேலையில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் திருவாரூர் மாவட்ட போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

No comments:

Post a Comment