தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பாலைவனத்துக்கு நிகரான வெப்பம் தற்போது உணரப்படுகிறது. கோடையின் முக்கிய நாட்கள் வருவதற்கு முன்பே, வெப்பத்தின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் சராசரியாக 31 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருப்பதால் மதுரை, வேலூர், சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில் வெப்பத்தின் உக்கிரத்தால் சாலைகளில் மக்கள் நடக்க முடியாமலும், இரவில் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலால் கான்
கிரீட் கட்டிடங்களில் வெப்பம் அதிகரித்து, அதன் தொடர்ச்சியாக மின் பயன்பாடும் அதிகமாகி, இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்படத் தொடங்கி உள்ளது.
நீர்மட்டம் குறையும்
மதுரையில் கடந்த ஒரு மாதமாகவே கோடை வெயில் சுட்டெரிக்கிறது. சில நாட்களுக்கு முன் வெயிலுக்கு மயங்கி விழுந்து 2 பேர் இறந்தனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பத்தின் அளவு மேலும் உயர வாய்ப்புள்ளது.
இதுகுறித்து காந்திகிராம பல்கலைக்கழக புவி அறிவியல் மைய பேராசிரியர் பா.குருஞானம் கூறும் போது, ‘‘குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே, கடந்த ஆண்டு மழை வெள்ளம் ஏற்பட்டது. பெரும் பாலான மாவட்டங்களில் சரியான மழை பொழிவில்லை. அதனால், பூமிக்கு மேலும், கீழும் தண்ணீரின் அளவு தற்போது குறைந்துவிட்டது. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை ஆய்வு செய்தால் குறைவாகத்தான் இருக்கும்” என்றார்.
வேளாண் பொறியாளர் செபாஸ்டின் பிரிட்டோராஜ் கூறும் போது, ‘‘கடந்த ஆண்டு, இதே நேரத்தில் (ஜனவரி முதல் தற்போது வரை) 90 முதல் 150 மி.மீ. மழை பெய்த நிலையில், இந்த ஆண்டு தற்போது வரை ஒரு மி.மீ. மழைகூட பெய்யவில்லை. காற்றின் ஈரப்பதத்தின் அளவு 86 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், காற்றின் வேகமும், ஒரு மணிக்கு 8 முதல் 16 கி.மீ. வேகத்தில், தெற்கு பகுதியில் இருந்து வடக்கு நோக்கி வீசுகிறது. இது வளிமண்டலத்தில் உள்ள வெப்பத்தின் அதிகரிப்பையையே உணர்த்துகிறது.
விவசாயம் பாதிக்க வாய்ப்பு
புறஊதா கதிர்களின் தாக்கத்தால் விவசாயத்தில் நுனி கருகல் நோய் போன்ற வெப்பத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அனைத்து நோய்களும் உருவாக வாய்ப்புள் ளது. நகரப்புறங்களில் அருகில் உள்ள நீர்நிலைகள் வறண்டு வேதி நச்சுப் பொருட்கள், அடி மண்ணுடன் கலந்து கொசு பெருக்கம் அதிகமாகி தொற்று நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.
கோடை வெயிலை எப்படி சமாளிக்கலாம்?
செபாஸ்டின் பிரிட்டோராஜ் மேலும் கூறும் போது, "ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா இரண்டு முதல் ஐந்து மழை நாட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த மழைநீரை சேகரிப்பது வறட்சியை ஈடுகொடுக்க நாம் செய்யும் முதல் செயலாகும். விவசாய நிலங்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே பாசனம் மேற்கொள்ள வேண்டும். சொட்டுநீர் பாசனம் மற்றும் வாய்மடை வரை பிளாஸ்டிக் குழாய்கள் அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும். வெயில் காலங்களில் வேதி உரங்களை தவிர்க்க வேண்டும். இவை எளிதாக உப்பாக மாறி, நிலத்தடியில் நீர் சொல்வதை தடுத்துவிடும். மீன் குட்டைகளில் நிழல் கூரை அமைப்பதால் மீன் உற்பத்தியை அழியாமல் பாதுகாக்கலாம், வீட்டுத் தோட்டங்கள் அமைத்திருப்போர் நிழல் கூரைகளைப் பயன்படுத்த வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment