திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 13 தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகள் காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 4 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் பல இடங்களில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், விளம்பரப் பதாகைகள், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை தாங்களாகவே அகற்றி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான சுவர்களிலும், நகராட்சி பகுதியில் உள்ள சுவர் விளம்பரங்களை இரு துறையும் சேர்ந்து அழித்து வருகிறது.
அப்படி இருந்தும் இதுவரை தேர்தல் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்ததாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் போலீஸாரே முன்வந்து, அதிமுக மீது 6 வழக்குகளும், திமுக மீது 4 வழக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் மீது தலா 1 வழக்கு என மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 6 புகார்கள்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை விலையில்லா பொருள்கள் வழங்குதல், இலவச மருத்துவ முகாம் நடத்துதல் என 6 புகார்கள் வந்தது.
கட்டுப்பாட்டு அறையில் உள்ள பணியாளர்கள் உடனடியாகப் பறக்கும் படையினருக்கு தகவல் அளித்து, அந்தப் பணியை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து அது குறித்த தகவல் புகார் அளித்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment