Wednesday 16 March 2016

புதிய வீட்டு வாடகைச் சட்டம்: மத்திய அரசு விரைவில் அறிமுகம்


புதிய வீட்டு வாடகைச் சட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. நகர்ப்புற வீட்டு வாடகைதாரர்கள், உரிமையாளர்களின் இப்போதைய தேவைகளுக்கு ஏற்ப இந்தச் சட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு மக்களவையில் செவ்வாய்க்கிழமை இது தொடர்பாகக் கூறியதாவது: தேசிய நகர்ப்புற வாடகை வீடுகள் கொள்கையை வடிவமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்போது கிராமப் பகுதிகளில் இருந்து நகரங்களுக்கு குடிபெயர்வோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நகரங்களுக்கு வருவோரில் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில்தான் வசிக்கின்றனர்.
 
எனவே, நடப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப வாடகைக்கு குடியிருப்போர், வீட்டின் உரிமையாளர்கள் என இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். இதற்கு எதிர்க்கட்சினரின் ஆதரவு தேவை.
 புதிய வாடகைச் சட்டத்துக்கான முன்வரைவு தயாரிக்கப்பட்ட பிறகு, மாநில அரசுகள் உள்பட சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், அவர்களின் கருத்துகளுக்கு ஏற்ப உரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றார் வெங்கய்ய நாயுடு.

No comments:

Post a Comment