Thursday, 3 March 2016

இம்மாத இறுதிக்குள் 100 கோடிப் பேருக்கு ஆதார் அட்டை'

இந்த மாத இறுதிக்குள் 100 கோடிப் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுவிடும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. 
 சென்னையில் ஆதார் அட்டையின் பயன்பாடுகள், அதன் வெற்றிக் கதைகள் எனும் பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதை இந்திய தனித்துவ அடையாள ஆணைய பொது இணை இயக்குநர் எம்.வி.எஸ். ராமி ரெட்டி, தென் மண்டல இணை இயக்குநர் அசோக் லெனின், முதன்மைச் செயலர் டி.கே.ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் தொடக்கிவைத்தனர். 
 இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணைய உயர் அதிகாரிகள் எம்விஎஸ் ராமி ரெட்டி, அசோக் லெனின் ஆகியோர் கூறியதாவது:
 நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் 2010, செப்டம்பர் 29-இல் ஆதார் அட்டை பதிவு நடைமுறைக்கு வந்தது. இந்த அட்டையானது முகவரி, அடையாளம் காணுதல் ஆகியவற்றுக்குச் சான்றாக உள்ளது. 
 மேலும், சமையல் எரிவாயு இணைப்பு, வங்கிச் சேவை, செல்லிடப்பேசி இணைப்பு, முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய உதவி வழங்குவது உள்ளிட்ட சேவை மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு ஆதார் அட்டை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதோடு, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் குடும்ப அட்டையின் மூலம் பொருள்களைப் பெறுவதற்கும் ஆதார் அட்டையை அதிகளவில் பயன்படுத்தியுள்ளனர். இதன்மூலம், போலி விற்பனை தடுக்கப்பட்டதோடு, ரூ.24 ஆயிரம் கோடி வருவாய் இழப்பும் தடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, அரசு, தனியார் தகவல் தளத்தில் இரட்டை, போலி அடையாளங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
 விரைவில் 100 கோடிப் பேருக்கு ஆதார் அட்டை: தமிழகத்தில் தற்போது 91 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல, தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் 80 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 
 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி இதுவரை 98.51 கோடிப் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள் 100 கோடிப் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுவிடும். இது, உலகில் வேறெங்கிலும் இல்லாத அளவிலான தகவல் சேமிப்பாக இருக்கும் என்றனர் அவர்கள்.
பாதுகாப்பாக இருக்கும்
 ஆதார் அட்டைக்காக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மூலம் சேமித்து வைக்கப்படுகின்றன. இதற்காக ஹைதராபாத், தில்லி, பெங்களூரு உள்ளிட்ட 8 மண்டலங்கள் செயல்படுகின்றன. அதோடு, இந்திய தனித்துவ அடையாள ஆணைய வளாகம் பெங்களூருவில் ரூ. 245 கோடியில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, "2048 பிட்' எனும் உயர் தொழில்நுட்பக் குறியீடுகள் மூலம் பொதுமக்களின் தகவல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தகவல்கள் அரசின் சேவைகள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் தனித்துவ அடையாளத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் .

No comments:

Post a Comment