Tuesday 29 March 2016

திருவாரூரில் நிதி நிறுவனங்களிலிருந்து ரூ.72.27 லட்சம் பறிமுதல்

திருவாரூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்குவதற்காக தனியார் நிதி நிறுவனங்களில் வைத்திருந்த ரூ.72 லட்சத்து 27 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும்படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தனியார் நிதி நிறுவனங்கள் சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பணம் வழங்கப்படுவதாக தேர்தல் அலுவலருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் மொத்தம் ரூ. 72 லட்சத்து 27ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், திருவாரூர் புதுதெருவில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12லட்சத்து 35ஆயிரமும், திருவாரூர் அருகே புலிவலத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.59 லட்சத்து 92ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர், இந்தத் தொகை திருவாரூர் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமீனாட்சி மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களும் உரிய ஆவணங்களைக் காட்டி, பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில்...
மன்னார்குடியில் இரண்டு தனியார் நிதி நிறுவனங்களில் ரூ.45 லட்சத்து 85 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
மன்னார்குடி ஒன்றிய ஆணையர் வெங்கடேசன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் த.சிவானந்தம் உள்ளிட்ட தேர்தல் பறக்கும்படையினர் மன்னார்குடி மூன்றாம்தெரு பகுதியில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அங்குள்ள தனியார் வணிக வளாகத்தில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடன் வழங்குவது தெரியவந்தது.
இதையடுத்து அந்நிறுவனத்திலிருந்து ரூ.43 லட்சத்து 5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் மன்னார்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான எஸ்.செல்வசுரபி மூலம் மன்னார்குடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல், மன்னார்குடி, நடுவாணியத்தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதற்காக வைத்திருந்த ரூ.2 லட்சத்து 79,940-ஐ தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த தொகையும் மன்னார்குடி சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

No comments:

Post a Comment