Thursday, 17 March 2016

தேர்தல் ஆணைய இணையதளம் செயல்படாததால் அரசியல் கட்சிகள் தவிப்பு


பராமரிப்பு பணிகள் காரணமாக தேர்தல் ஆணையத்தின் இணையதளம் செயல்படாததால், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அரசியல் கட்சியினர் தவித்து வருகின்றனர்.
 அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், கட்சிக் கூட்டங்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால், இந்த அனுமதியை அவர்கள் கட்டாயம் பெற்றாக வேண்டும். கடந்த தேர்தல்களில் இந்த அனுமதி பெறும் முறை, தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் விண்ணப்பித்து பெறும் அளவில் இருந்தது. 
 இணையதளம் மூலம்...: தற்போது பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 இந்த அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த, கடந்த 4-ஆம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவில் இருந்து தேர்தல் ஆணையத்தின் இணையதளமானது (www.tnelections.gov.in) பராமரிப்புப் பணிகள் காரணமாக செயல்படாமல் உள்ளது.
 இரண்டு நாள்கள் மட்டுமே இந்தப் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் எனவும், திங்கள்கிழமை (மார்ச் 14) முதல் இணையதளம் வழக்கம் போல் இயங்கும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், புதன்கிழமை வரை இணையதளம் இயங்கவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினரும் புகார் தெரிவிக்கின்றனர்.
 என்ன பிரச்னை?: இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த உழவர் முன்னேற்ற கட்சி உள்ளிட்ட சில சுயேச்சை கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூறியது:
 வரும் 20-ஆம் தேதியன்று எங்கள் கட்சியின் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதற்கான அனுமதியைப் பெற, தேர்தல் ஆணைய இணையதளத்தில் பலமுறை முயன்ற போதும் செயல்படவில்லை. இதன்பின் தேர்தல் அலுவலரிடம் விசாரித்த போது, இணையதள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.
 பொதுக்கூட்ட அனுமதிக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பு சரியானது என்றாலும், அந்த இணையதளம் 24 மணிநேரமும் முழுமையான அளவில் இயங்க வேண்டும். அப்படி இயங்காத சமயங்களில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் விண்ணப்பித்து கடந்த தேர்தல்களின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை கையாள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment