தேர்தல் விதிமீறல்கள் குறித்து கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான எம்.மதிவாணன் தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் சேவை மையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியர் மேலும் கூறியதாவது:
ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க இலவச தொலைபேசி வசதியுடன் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1800-425-7035 என்ற இந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், தேர்தல் ஆணைய இணையதளத்தில் அளிக்கப்படும் புகார்களுக்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் 7339661879 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கும் கட்செவி அஞ்சல் மூலம் ஒளிப்பதிவுகளாகவும், குறுந்தகவல்களாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்த தகவல்களையும், பிரசாரத்தின்போது சம்பந்தப்பட்ட வாகனங்கள் அனுமதி பெற்றுள்ளதா என்பதையும் 1950 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, தகவல்களை பெறலாம் என்றார் ஆட்சியர் எம்.மதிவாணன்.
No comments:
Post a Comment