Friday, 4 March 2016

பிளஸ் 2 தேர்வுகள் இன்று தொடக்கம்


தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மொழிப் பாடம் முதல் தாளுடன் வெள்ளிக்கிழமை (மார்ச் 4) தொடங்குகின்றன. 
 ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வுகளை எழுதுவதற்காகத் தமிழகம், புதுவையில் உள்ள 6,550 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 39,697 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர்.
 மாணவிகள் அதிகம்: தேர்வு எழுத இருப்பவர்களில் 3 லட்சத்து 91,806 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 47,891 பேர் மாணவிகள். மாணவர்களைவிட 56,085 மாணவிகள் கூடுதலாகத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களைத் தவிர, 42,347 பேர் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுதப் பதிவு செய்துள்ளனர்.
 சென்னையில்...: சென்னை மாநகரில் 410 பள்ளிகளில் இருந்து 51,091 மாணவ-மாணவிகள் 145 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 23,617 பேர் மாணவர்கள். 27,474 பேர் மாணவிகள்.
 அதேபோல், புதுவையில் அமைக்கப்பட்டுள்ள 35 தேர்வு மையங்களில் 135 பள்ளிகளைச் சேர்ந்த 14,337 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். அவர்களில் 6,556 பேர் மாணவர்கள். 7,781 பேர் மாணவிகள். தமிழகம், புதுவையில் 2,421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 தேர்வு எழுதும் கைதிகள்: இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகளை 106 கைதிகள், சென்னை புழல், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் எழுதுகின்றனர்.
 கட்டணத்தில் விலக்கு: தமிழ் வழியில் பயின்று பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு 5 லட்சத்து 56,498 பேர் தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு பெறுகின்றனர்.
 மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை: சொல்வதை எழுதுபவர்கள், மொழிப் பாடங்களில் விலக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், அவர்கள் தரைத் தளங்களில் தேர்வு எழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 நுழைவுச் சீட்டில் அறிவுரை: தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் முறையாக, தேர்வுக் கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளன.
 பாதுகாப்பு ஏற்பாடுகள்: பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களுக்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கைகள், மின்சாரம், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 பறக்கும் படையில் 4 ஆயிரம் பேர்: 
 தேர்வுக் கால கண்காணிப்புக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டத் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கல்வித் துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார்கள். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
 மேலும், தேர்வு மையங்களில் ஆய்வு செய்வதற்காக சுமார் 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை, நிலையான படைகள் ஆகியன முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளன.
 ஒழுங்கீனங்களுக்கு கடும் தண்டனை: மாணவர்கள் தேர்வு மைய வளாகத்துக்குள் செல்லிடப்பேசியை எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு அறையில் செல்லிடப்பேசியை வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இந்த உத்தரவுகளை மீறி, தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.
 அதேபோல், துண்டுத் தாள் (பிட்) வைத்திருத்தல், பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீனங்கள், முறைகேடுகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.
 ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவும், அதை ஊக்குவிக்கும் விதமாகவும் பள்ளி நிர்வாகம் செயல்பட்டால், பள்ளியின் தேர்வு மையத்தை ரத்து செய்யவும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்குப் பரிந்துரைக்கப்படும் என்று அரசுத் தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.
விடைகள் முழுவதையும் கோடிட்டு அடித்தால் தண்டனை
 மாணவ - மாணவிகள் விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே முழுவதுமாக கோடிட்டு அடிக்கும் செயல் இனி ஒழுங்கீனச் செயலாக கருதப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
 அவ்வாறு விடைத்தாளில் விடைகளை அடிக்கும் மாணவ - மாணவிகள் அடுத்து வரும் இரு பருவங்களிலும் தேர்வு எழுத முடியாது. கொடுக்கப்படும் வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு விடை எழுதினால் முழு மதிப்பெண்கள் (நூற்றுக்கு நூறு) பெற முடியாது என்ற எண்ணம் உருவாகும் நேரத்தில், உடனடித் தேர்வில் எளிதான வினாக்கள் இருக்கும் என்பதால் அதை எழுதிக் கொள்ளலாம் என்று எண்ணி, மாணவர்கள் இவ்வாறு கோடிட்டு அழிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, தேர்வுத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 அதேபோல், வினாத்தாளில் குறியீடு எழுதுவது, விடைத்தாளில் பெயர், குறியீடுகள் எழுதுவது, கலர் பென்சில், கலர் பேனா போன்றவற்றைப் பயன்படுத்துவது, விடைத்தாளின் இடது, வலது ஓரங்களில் எழுதுவது, கிழிப்பது போன்றவற்றை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.
 மேலும், விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் உள்ள புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கையொப்பமிடுவது, வினா எண்ணைக் குறிப்பிடுவது, எழுதாத பக்கங்களில் குறுக்கு கோடிடுவது போன்றவற்றைத் தவறாமல் செய்ய வேண்டும் என்று தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment