Saturday 26 March 2016

16 வாக்குச்சாவடி மையங்கள் மாதிரி மையங்களாகத் தேர்வு


திருவாரூர் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா நான்கு வாக்குச்சாவடி மையங்கள் மாதிரி வாக்குச்சாவடி மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்று மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எம்.மதிவாணன் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
திருவாரூர் மாவட்டத்தில், நகரப் பகுதிகளில் 1,400, கிராமப்புறங்களில் 1,200-க்கும் மேல் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளைப் பிரித்து, துணை வாக்குச்சாவடி அமைத்திடவும், நான்கு வாக்குச்சாவடிகளின் பெயர்களைத் திருத்தம் செய்யவும், 27 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்யவும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, திருத்துறைப்பூண்டி தொகுதியில் கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள 40-ஆம் எண் கொண்ட வாக்குச்சாவடியையும், திருவாரூர் தொகுதியில் விஜயபுரத்தில் 137-ஆம் எண் கொண்ட வாக்குச்சாவடியையும் பிரித்து பெண்களுக்கான புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம், திருவாரூர் மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,152-ஆக உயரும்.
மேலும், தொகுதிக்கு நான்கு வாக்குச்சாவடி மையங்களை மாதிரி வாக்குச்சாவடி மையங்களாக அமைத்திட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில், திருத்துறைப்பூண்டி தொகுதியில் கோட்டூர், பள்ளங்கோயில், திருத்துறைப்பூண்டி, எடையூர், மன்னார்குடி தொகுதியில் நீடாமங்கலம், மேலநாகை, மன்னார்குடி, இலக்கணம்பேட்டையும், திருவாரூர் தொகுதியில் கொரடாச்சேரி, விஜயபுரம், புலிவலம், மரக்கடையும், நன்னிலம் தொகுதியில் விருப்பாச்சிபுரம், குடவாசல், கோயில்திருமாளம், நன்னிலம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களும் மாதிரி வாக்குச்சாவடி மையங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் 40-ஆவது வாக்குப்பதிவு மையமும், மன்னார்குடி தொகுதியில் 146-ஆவது மையமும், திருவாரூர் தொகுதியில் 137-ஆவது மையமும், நன்னிலம் தொகுதியில் 266-ஆவது மையமும் பெண்களுக்கான வாக்குப்பதிவு மையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தேர்தல் அலுவலர்கள், போலீஸார், அரசியல் கட்சியின் முகவர்கள் ஆகியோர் பெண்களாகவே இருப்பார்கள். மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment