ஆதார் மசோதா 2016’ மக்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக அறிய வேண்டிய அம்சங்கள்:
* ஆதார் மசோதாவை பண மசோதாவாக தாக்கல் செய்வதற்கு காங்கிரஸ் ஆட்சேபம் தெரிவித்தது. மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், அங்கு வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் ஆதார் மசோதாவை பண மசோதாவாக அரசு தாக்கல் செய்கிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
* பிஜு ஜனதா தளம் உறுப்பினர் பி.மஹதாப் பேசும்போது, “இந்த மசோதா தற்போதைய வடிவில் சட்டமானால் ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே இம் மசோதாவை நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்” என்றார். மஹதாப் கருத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே, அதிமுக உறுப்பினர் பி.வேணுகோபால் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். கார்கே கூறும்போது, “ஆதார் மசோதாவை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இதில் குறைபாடுகள் உள்ளன” என்றார்.
* நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த பதிலின் அம்சங்கள்:
* “முந்தைய அரசு கடந்த 2010 செப்டம்பரில் ஆதார் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விவாதம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மசோதா முந்தைய ஆட்சியில் நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.
* அரசு மானியத்தை முறைப்படுத்தவும் உண்மையான பயனாளிகளை அடையாளம் காணவும் இந்த மசோதா உதவும். இதன் மூலம் மானியச் செலவு குறையும். சமையல் எரிவாயு நுகர்வோருக்கு ஆதார் எண் மூலம் மானியம் வழங்குவதன் மூலம் மத்திய அரசு ரூ. 15 ஆயிரம் கோடி சேமித்துள்ளது.
* ஆதார் எண் அடிப்படையில் 4 மாநிலங்கள் பொது விநியோகத் திட்டத்தை சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளன. இதன் மூலம் ரூ.2,300 கோடிக்கும் அதிகமாக சேமித்துள்ளனர்.
* விரல்ரேகை பதிவு உள்ளிட்ட ஆதார் விவரங்களை சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இல்லாமல் யாருடனும் பகிர்ந்துகொள்ள மாட்டோம். இந்த மசோதாவின் காப்புரிமை தங்களுக்கு வேண்டும் என காங்கிரஸ் விரும்பினால் தரத் தயாராக இருக்கிறோம்.
* முந்தைய அரசின் மசோதாவை விட தற்போது மசோதா மாறுபட்டது. பயனாளிகளுக்காக பணத்தை எதன் அடிப்படையில் செலவிடுவது என்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். இதை வெறும் அடையாள ஆவண மாக நாங்கள் கருதவில்லை எனவே இதை பண மதோதாவாக தாக்கல் செய்தோம்.
* நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 97 சதவீதம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். இதுபோல் 67 சதவீத மைனர்கள் ஆதார் பெற்றுள்ளனர். ஒவ்வொரு நாளும் 5 முதல் 7 லட்சம் பேர் ஆதார் எண் பெறுகின்றனர்” என்றார் ஜேட்லி.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
* மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் அதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று கோரின.
அமைச்சர் பதில்
* மாநிலங்களையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில், “ஆதார் திட்டத்தின் கீழ் 99 சதவீத இந்தியர்களின் பயோமெட்ரிக் விவரம் சேகரிக்கப்பட்டது. இதன் ரகசியம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்த விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம். புள்ளிவிவரம் சேகரிக்கும் பணியில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடு படுத்தப்படவில்லை. பெங்களூரு, மானேசர் ஆகிய இடங்களில் உள்ள புள்ளிவிவர மையங்களில் இந்த விவரங்கள் பாதுகாக்கப்படும்” என்றார்.
No comments:
Post a Comment