Wednesday, 9 March 2016

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்: 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப் பரிந்துரை


குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்தவரும், வழக்குரைஞருமான அஸ்வனி குமார் உபாத்யாயவும் இதேபோன்ற மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த மனு தொடர்பான விசாரணையை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூருக்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்துள்ளது.
 முன்னதாக, இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள குற்ற வழக்குகளை விரைவில் விசாரித்து ஓராண்டில் தீர்ப்பு வழங்க வேண்டுமென்று கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment