Saturday, 14 November 2015

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை










வங்க கடல் பகுதியில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த வாரம் சில நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்தது. இந்த நிலையில் 12-ந் தேதி வங்க கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இது தொடர்ந்து தீவிரம் அடைந்து மத்திய அரபிக்கடல் நோக்கி நகர்ந்து வருவதாலும், அதேபோல தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாலும் தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 

இதற்கிடையே திருவாரூரில் நேற்று காலை பெய்ய தொடங்கிய மழை மாலை வரை பெய்தது. பலத்த மழையாக பெய்யாமல் சாரல் மழையாக பல மணி நேரம் நீடித்த மழையால் திருவாரூர் கடை வீதி உள்ளிட்ட இடங்கள் நேற்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், நன்னிலம், மன்னார்குடி, வடுவூர், கூத்தாநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.

மழை நிலவரம்

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நன்னிலத்தில் அதிக பட்சமாக 22 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மாவட்டத்தின் மற்ற இடங்களில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டர் அளவுகளில்) வருமாறு:-

முத்துப்பேட்டை-6, திருவாரூர்-4, மன்னார்குடி-3, திருத்துறைப்பூண்டி-3, குடவாசல்-2, வலங்கைமான்-2, பாண்டவையாறு தலைப்பு-2, நீடாமங்கலம்-1. மொத்த மழை அளவு 46. சராசரி மழை அளவு 6 மில்லி மீட்டர் ஆகும்.

No comments:

Post a Comment