திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ரயில் நிலையத் தண்டவாளத்தில் நாச வேலைகளில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய சிசிடிவி கேமரா புதன்கிழமை பொருத்தப்பட்டது.
திருவாரூர் மற்றும் நீடாமங்கலம் பகுதி ரயில் தண்டவாளங்களில் விஷமிகளால் கற்கள் வைக்கும் நிகழ்வு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுகிறவர்கள் ஏதோ விளையாட்டுத்தனத்துக்காக செய்பவர்கள் அல்ல என்று ரயில்வே காவல்துறை அலுவலர்கள் கருத்துத் தெரிவித்து கண்காணித்து வருகின்றனர்.
இருப்பினும், தொடர்ந்து தண்டவாளத்தில் கற்கள் வைக்கும் நிகழ்வு நடந்துகொண்டு தான் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் ரயில் நிலைய யார்டு பகுதியில் தண்டவாளத்தில் இரும்புத் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்தபோது, அவர் இரும்பைத் திருடிக் கொண்டு தப்பியோடும்போது தண்டவாளத்தில் இரும்பை வைத்ததாகக் கூறப்பட்டது.
இச்சம்பவம் நடைபெற்று சில நாள்களுக்குள் திருவாரூர் அருகே சிங்களாஞ்சேரியில் தண்டவாளத்தின் இணைப்புப் பகுதியில் தொழில்நுட்பம் தெரிந்தவர் ஒருவரால் இரும்புத் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, ரயில்வே மற்றும் மாநில காவல்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
தண்டவாளத்தில் கற்கள் வைக்கும் நிகழ்வு நீடாமங்கலத்தில் அடிக்கடி நடந்து வருவதால் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் விரைவு நடவடிக்கை மேற்கொண்டு, அப்பகுதியில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்க உத்தரவிட்டார்.
தற்போது, நீடாமங்கலம் ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் பாப்பையன் தோப்பு என்ற இடத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி புதன்கிழமை முதல் ரகசியமாகக் கண்காணித்து வருகிறது காவல்துறை.
இதுதவிர, ரயில் நிலையத்தின் தண்டவாளம் மற்றும் பல்வேறு இடங்களில் ரகசிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
இனி தண்டவாளத்தில் கற்கள் வைத்து சதியில் ஈடுபடும் விஷமிகள் சிசிடிவி கேமராவின் உ தவியுடன் பிடிபடுவார்கள் என்பதில் ஐயமில்லை.
விரைவில் திருவாரூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment