திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நன்னிலத்தில் 14 மி.மீட்டர் மழை பதிவானது.
வடகிழக்கு பருவ மழை
தமிழகத்தில் கடந்த 28-ந்தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. பருவமழை தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. அதன் பிறகு குறைந்த அளவே மழை பெய்து வந்தது. இந்தநிலையில் தென்மேற்கு வங்க கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாகவும், இதன் காரணமாக அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.
திருவாரூரில் நேற்று காலை 10.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மதியம் வரை நீடித்தது. இந்த மழை காரணமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிக்கு வந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதேபோல் மன்னார்குடி, நன்னிலம் உள்ளிட்ட இடங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.
மழை அளவு
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் நன்னிலத்தில் அதிகபட்சமாக 14 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டர் அளவுகளில்) வருமாறு:-
குடவாசல்-7, திருவாரூர்-5, வலங்கைமான்-2, திருத்துறைப்பூண்டி-1. நேற்று மாவட்டம் முழுவதும் சராசரியாக 3 மில்லி மீட்டர் மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment