சவூதியில் கை துண்டிக்கப்பட்ட பெண் கஸ்தூரி, விமானத்தில் சென்னைக்கு சனிக்கிழமை வந்தார். பின்னர் அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி முனிரத்தினம், சவூதி அரேபிய நாட்டில் வீட்டுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். அங்கு வீட்டு உரிமையாளரால் அண்மையில் கை துண்டிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவரை தமிழகம் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து, சவூதி அரேபிய தூதரகத்தின் உதவியோடு, விமானத்தில் கஸ்தூரி சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை வரவேற்க 20-க்கும் மேற்பட்ட உறவினர்களும், தமிழக அரசு அதிகாரிகளும் வரவேற்றனர். பின்னர் கஸ்தூரி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு கட்டண வார்டுகள் பகுதியில் தனி வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த வார்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.விமலா கூறியதாவது:
கஸ்தூரிக்கு கை, கால்களில் ஏற்பட்டுள்ள காயங்கள் ஆறி வருகிறது.
அவருக்கு சவூதியில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆய்வு செய்வதற்காக 6 டாக்டர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேவையான பரிசோதனைகள் மேற்கொண்ட பின்பு, சிகிச்சை அளிக்கப்படும். குணமடைந்ததும் அவர் வீடு திரும்புவார்.
அவரது உறவினர்கள் தங்குவதற்கும் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
No comments:
Post a Comment