திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை தங்கப் புதையல் காசுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்துக்குள்பட்ட ஆணைவடபாதியைச் சேர்ந்த விவசாயி செல்லப்பா.
இவர் ஞாயிற்றுக்கிழமை வயலுக்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். அப்போது, இவரது காலில் ஏதோ ஒரு பொருள் தடுக்கியது. பின்னர் அந்த இடத்தில் அவர் தோண்டிப் பார்த்தபோது, தங்கக் காசுகள் அடங்கிய உலோகக் குடுவை இருந்தது தெரியவந்தது. பின்னர், அவர் அந்த குடுவையை வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.
இந்தத் தகவல் அக்கம் பக்கம் வீட்டினருக்கு தெரிந்து, வருவாய்த்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். குடவாசல் வட்டாட்சியர் சொக்கநாதன், செல்லப்பா வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியதில் குடுவையில் 140 தங்கக் காசுகளும், சிறிய தங்கக் கட்டி ஒன்றும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை வட்டாட்சியர் சொக்கநாதன் பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் காசுகள் சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து குடவாசல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment