Tuesday 24 November 2015

வரியை திரும்பப் பெற எளிய விதிகள்

வரியை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவ நடைமுறைகளை எளிமையாக்குவது குறித்து ஆய்வு செய்ய புதிய குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
 இதன் மூலம், நிதித்துறை வல்லுநர்களின் உதவி இல்லாமலேயே, விண்ணப்பப் படிவங்களை பொதுமக்கள் (வரிசெலுத்துவோர்) எளிதாக நிரப்பிக் கொள்ள வழிவகை செய்யப்படவுள்ளது.
 இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
 வெளியாள்களின் உதவி இல்லாமல் விண்ணப்பதாரர்களே நேரடியாகப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, வரியை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களை எளிமையாக்க வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றையும் வருமான வரித் துறை அமைத்துள்ளது.
 புதிய குழுவுக்கு, அரசுத் துறையின் இணைச் செயலாளர் அளவிலான அதிகாரி ஒருவர் தலைமை வகிப்பார். பட்டயக் கணக்காளர்கள், வரித் துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் அந்தக் குழுவில் இடம்பெறுவர்.
 மேலும், விண்ணப்பப் படிவத்தில் இடம்பெறக் கூடிய பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்தும் அந்தக் குழு ஆய்வு செய்யவுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 இதற்கு முன்பு, வரியை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் 14 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது. அதில், வரி செலுத்தியவர்களின் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்கள், வெளிநாட்டுப் பயண விவரங்கள் போன்றவற்றை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.
 இதற்கு, வல்லுநர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, எளிமையான விண்ணப்பப் படிவத்தை கடந்த ஜூன் மாதம் வருமான வரித் துறை அறிமுகம் செய்தது.
 அந்த விண்ணப்பத்தில், பணத்தை வரவு வைக்க வேண்டிய வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றைக் குறிப்பிடும் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment