Saturday, 9 May 2015

வேலைவாய்ப்பு குறைந்ததன் எதிரொலி என்ஜினீயரிங்கை விட கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் அதிகரிப்பு
















வேலைவாய்ப்பு குறைந்ததால், என்ஜினீயரிங் படிப்பைவிட கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.

என்ஜினீயரிங் விண்ணப்பம்

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பம் கடந்த 6-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆங்காங்கே விண்ணப்பம் வழங்கப்பட்டாலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தான் வாங்க வேண்டும் என்று அரக்கோணம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், விழுப்புரம், காஞ்சீபுரம் போன்ற இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து விண்ணப்பங்களை வாங்கிச் சென்றதை காணமுடிந்தது.

இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் 20-க்கும் மேற்பட்ட கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் எளிதாக, வரிசையில் காத்து நிற்காமல் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். துணைவேந்தர் மு.ராஜாராம் ஆலோசனையின்படி என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் இந்த ஏற்பாடுகளை செய்து விண்ணப்பம் விநியோக பணிகளை கண்காணித்து வருகிறார்.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர நேற்று வரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 371 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மெக்கானிக்கல் 2-ம் இடம்

நேற்று விண்ணப்பம் வாங்க வந்த 100-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளிடம் என்ஜினீயரிங்கில் எந்த பிரிவு எடுத்து படிக்கப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்கள் தெரிவித்த கருத்துகளின் முடிவுகள் வருமாறு:-

எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் (இ.சி.இ.) பிரிவு முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக மெக்கானிக்கல் பிரிவும், அதற்கு அடுத்து சிவில் என்ஜினீயரிங் மற்றும் இதர பிரிவுகள் உள்ளன. கடந்த வருடத்தைவிட இந்த வருடம் பயோடெக்னாலஜி பிரிவை கூடுதல் மாணவர்கள் எடுப்பார்கள் என்று தெரிகிறது.

கலை அறிவியலில் ஆர்வம்

நேற்று என்ஜினீயரிங் விண்ணப்பத்தை ஏராளமானவர்கள் வாங்கி இருந்தாலும் அவர்களில் மதிப்பெண் குறைந்த பலர் கலை அறிவியல் படிப்பில் சேரப்போதாக தெரிவித்தனர். அதற்கேற்ப நேற்று சென்னையில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் வாங்க மாணவ-மாணவிகள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் விண்ணப்பம் வாங்கிச் சென்றனர்.

இந்த கூட்டம் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் இருப்பதாக கல்லூரி ஆசிரியர்கள் சிலர் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், கடந்த சில வருடங்களாக என்ஜினீயரிங் கல்லூரிகளில் குறைந்த கட் ஆப் எடுத்த மாணவர்கள் கூட சேர்ந்தார்கள். ஆனால் தற்போது என்ஜினீயரிங் படித்த மாணவ-மாணவிகளுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை. அதன் காரணமாக கலை அறிவியல் படிப்புக்கு வழக்கத்தை விட கூடுதலாக ஏராளமானவர்கள் விண்ணப்பங்களை பெற்றுச் சென்ற வண்ணம் உள்ளதாக தெரிவித்தனர்

No comments:

Post a Comment